மல்யுத்த விளையாட்டில் அண்மை காலங்களாக இந்திய வீரர் வீராங்கனைகளை கோலோச்சி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் என அனைத்திலும் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவகையில் இம்முறை டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் 6 வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தனர். 


இந்நிலையில் தற்போது போலாந்தில் நடைபெற்று வரும் உலக ஒலிம்பிக் தகுதி போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி மேலும் 2 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்தப் தகுதி போட்டிகளில் ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித் மாலிக் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். இவர் அரையிறுதிப் போட்டியில் வெனிசுலாவின் ரோபர்டியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். 




இதேபோல் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சீமா பிஸ்லா அரையிறுதிப் போட்டியில் போலாந்து நாட்டின் லூகாசியக்கை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் இவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த தகுதி போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் 2 பேரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெறுவார்கள். 


இந்தியா சார்பில் ஏற்கெனவே 3 வீரர்கள் மற்றும் 3 வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருந்தனர். ஆடவர் பிரிவில் ரவி தஹியா(57 கிலோ), பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மகளிர் பிரிவில் வினேஷ் போகாட்(53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தற்போது மேலும் இருவர் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.