இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, முதல் டி20 போட்டியில் தோற்றிருக்கலாம். ஆனால், ஒரே ஒரு அட்டகாசமான கேட்சால்  டிரெண்டிங்கிலும், ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல்!






பவுண்டரி லைனில் ஹர்லீன் பிடித்த அந்த கேட்ச், கிரிக்கெட் உலகில் அசத்தலான கேட்சுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து மோதிய முதல் டி-20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்த கேட்சை பிடித்து அசத்தினார் ஹர்லீன் தியோல்.


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிரபலங்களில் மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தானா ஆகியோர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அந்த வரிசையில், நேற்று நடந்த சம்பவத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் இவர். யார் அந்த ஹர்லீன் தியோல்?



பஞ்சாபைச் சேர்ந்த 23 வயதேயான ஹர்லீன், ஹிமாச்சல் பிரதேச அணிக்காக விளையாடி வருபவர். அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்வுமனான ஹர்லீன், ஸ்பினன்ர்களுக்கு எதிராக அதிரடி காட்டுபவர்.


கிரிக்கெட் விளையாடும் ஆசையில், சிறுவர்களுடன் சேர்ந்து ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி பயிற்சி எடுத்து கொண்ட ஹர்லீன், கிரிக்கெட்டை தனது ‘கரியராக’ தேர்வு செய்தவர். உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அம்மா மட்டும் ஆதரவு தெரிவிக்க கிரிக்கெட்டை முழு நேர வேலையாக கையில் எடுத்தார் ஹர்லீன்!






ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேர்ன் வார்னேவை முன்மாதிரியாக கொண்டு கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளராக களமிறங்கிய ஹர்லீன், பேட்டிங் ஆல்-ரவுண்டராக தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறார்.


கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில அறிமுகமானார். அன்று முதல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை பிடித்து வருகிறார் ஹர்லீன். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஹர்லீன் தியோல் இடம் பிடித்திருந்தார். “கேட்சஸ் வின் மேட்சஸ்” என்பார்கள், ஆனால், ஹர்லீனின் கேட்ச் போட்டியை வெல்லவில்லை என்றாலும், கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை வென்றுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீராங்கனையாக உருவாகி வரும் வீராங்கனைகளின் பட்டியலில் ஹர்லீன் தியோலுக்கு நிச்சயம் இடம் உண்டு! ஸ்மிரிதி, ஜெமிமா, ஹர்லீன், ஸ்நே ரானா, ஷஃபாலி என இளம் படையுடன் அசத்தி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சாதிக்க இன்னும் நிறைய உள்ளது. கமான் கேர்ள்ஸ்!






முன்னதாக, நேற்று நடந்த போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து வந்த ஏமி ஜோன்ஸ் 43 ரன்கள் அடித்திருந்த போது ஆட்டத்தின் 19ஆவது ஒவரில் ஷிகா பாண்டே பந்துவீச்சில் பந்தை சிகருக்கு விரட்ட முற்பட்டார். அப்போது பவுண்டரி எல்லை கோட்டில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஹர்லின் தியோல் அசத்தலாக டைவ் செய்து பந்தை உள்ளே தட்டிவிட்டு மீண்டும் உள்ளே வந்து லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தி இருந்தார் தியோல்.


இரண்டாவது இன்னிங்ஸில், 8.4 ஓவர்களில் இந்திய அணி 54 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து இருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நிற்காததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று இருந்தது. இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.