இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் முக்கியமான ஒருவர் ஹர்பஜன் சிங். கடந்த 2015-ம் ஆண்டு பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை திருமணம் செய்து கொண்ட ஹர்பஜனுக்கு, ஹினயா ஹீர் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த ஜோடிக்கு இப்போது இரண்டாவதாக ஒரு குழந்தை இன்று பிறந்துள்ளது.






இந்த மகிழ்ச்சியான செய்தியை, ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ”ஆண் குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம்” எனவும் ஒரு அழகிய கவிதையோடு இந்த செய்தியை ஹர்பஜன் பகிர்ந்து கொண்டார்.


ஜூனியர் ஹர்பஜனின் வருகைக்கு கிரிக்கெட் வட்டாரத்தை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர், ஜூலை 3-ம் தேதிதான் ஹர்பஜன் சிங் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், இப்போது ஜூனியர் ஹர்பஜன் சிங்கின் பிறப்பிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 






















ஹர்பஜனுக்கு வாழ்த்துகளுக்கு தெரிவித்த ரசிர்கள், இந்திய அணிக்கு ஒரு கேப்டன் பிறந்துவிட்டான் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். சவுரவ் கங்குலி, எம்.எஸ்.தோனி மற்றும் சுனில் கவாஸ்கர் என இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் ஜூலை மாதத்தில்தான் பிறந்துள்ளனர். இதனால், இந்திய அணிக்கு ஒரு கேப்டன் உருவாகப் போகிறான் எனவும் கமெண்டுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.


ஹர்பஜன் சிங்கை பொருத்தவரை, தன்னுடைய அசத்தலான பந்துவீச்சின் மூலம் பல முறை இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். இன்றும், சிங் இஸ் கிங் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் ஹர்பஜன் சிங் சிறப்பாக விளையாடி வருகின்றார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 150 விக்கெட் உடன் 5ஆவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பிடித்தார்.