யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்காக இந்திய 17 வயதுக்குட்ப்பட்ட(யு-17) மகளிர் அணி தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் அணி இத்தாலி சென்று 4 நாடுகள் போட்டியில் பங்கேற்றது. அதன்பின்னர் தற்போது இந்திய யு-17 மகளிர் அணி நார்வே சென்றுள்ளது. 


இந்நிலையில் கடந்த வாரம் இந்திய யு-17 மகளிர் இத்தாலியில் இருந்தப் போது இந்திய வீராங்கனை ஒருவரிடம் துணை பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலில் அந்த வீராங்கனையுடன் தங்கியிருந்த மற்றொரு வீராங்கனை பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி இது தொடர்பாக அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் இடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அதில் அவர் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. 


நடந்தது என்ன?


இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மளேனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து துணை பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தற்போது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய யு-17 மகளிர் அணி அடுத்து நார்வேயில் கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது. அந்த அணியுடன் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் செல்லவில்லை. அவர் இந்தியா திரும்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 


 






கால்பந்து சம்மளேனத்தின் நிலைப்பாடு என்ன?


இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மளேனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய யு-17 மகளிர் அணி ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்திருந்த போது ஒருவர் வீராங்கனையிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த நபரை இந்திய கால்பந்து சம்மளேனம் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவரை இந்தியாவிற்கு திரும்பி வந்து விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளோம். இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து சம்மளேனம் ஒருநாளும் அனுமதிக்காது ” எனத் தெரிவித்துள்ளது. 


 






இத்தாலி சென்று இருந்த இந்திய யு-17 மகளிர் அணி 4 நாடுகள் தொடரில் விளையாடியது. அதில் இத்தாலியிடம் 7-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் சிலி நாடுவிடம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மெக்சிகோவிடம் 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்திருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய யு-17 மகளிர் அணி நார்வே சென்று ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண