இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகிப்பவர் ரவிசாஸ்திரி. கடந்த 2014ம் ஆண்டு முதல் அவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. அப்போது, இந்திய கேப்டன் விராட் கோலி தனக்கும், ரவிசாஸ்திரிக்கும் இடையேயான உறவு பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
விராட் கோலி அப்போது பேசியதாவது, “ ரவிசாஸ்திரியுடனான அனுபவம் என்பது எங்களுக்கு விலைமதிப்பற்றது. அவருடனான பணி நிமித்தமானஉறவு பற்றி சில வார்த்தைகள் கூறுகிறேன். 2014ம் ஆண்டு முதல் எங்களது உறவு சில ஆண்டுகளாக உள்ளது. நான் அவரை பல முறை சந்தித்துள்ளேன். ஏனென்றால், அவர் இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் முக்கிய குரல். அவருடைய வர்ணனைத் திறன்களை நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறோம். நாங்கள் உண்மையிலே ஒன்றாக வேலை செய்ய ஆரம்பித்தோம்.
2014ம் ஆண்டு ரவிசாஸ்திரி எங்களுக்கு முதன்முறையாக உத்வேக உரை அளித்தார். அப்போது நாங்கள் ஒரு அணியாக சற்று பின்தங்கியிருந்தோம். எதுவும் சரியாக அப்போது நடக்கவில்லை. அவரது முதல் பேச்சின் முதல் வார்த்தையில் எங்களை “பாய்ஸ்” என்று அழைத்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் கீழே அமர்ந்து இருந்தேன். அப்படி ஒரு உற்சாக உரையை அதற்கு முன் நான் கேட்டதே இல்லை. அவ்வளவு தெளிவாக, உத்வேகமாக, உறுதியாக பேசினார். அவரது பேச்சை கேட்டு எனது உடல் சிலிர்த்தது.
எங்களது தொழில்ரீதியான உறவு நம்பிக்கையாலும், பரஸ்பர மரியாதையாலும் கட்டமைக்கப்பட்டது. எங்களது நோக்கங்களை பகிர்ந்து கொள்வோம். எங்களது முழு கவனமும் இந்திய அணியை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வதும், சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதிலுமே இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒட்டுமொத்த அணியின் சாதுர்யத்தாலும் சாதிக்க முடிந்தது என்று நினைக்கிறேன். அது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.
ரவிசாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பெரியளவிலான ஐ.சி.சி. தொடரை கைப்பற்றாவிட்டாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த நாட்டில் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது என்று பல வெற்றிகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு கிரிக்கெட் வர்ணனையாளராக ரவிசாஸ்திரி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Tokyo Paralympics | பாராலிம்பிக் படகுப்போட்டி : அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்திய வீராங்கனை..