இந்த ஆண்டின் கடைசி பேட்மிண்டன் தொடரான பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த், லக்‌ஷ்யா சென், சத்விக்சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி மற்றும் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் முதலில் நடைபெற்ற குரூப் போட்டிகளில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷ்யா சென் தவிர மற்றவர்கள் தோல்வி அடைந்து வெளியேறினர். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் பி.வி.சிந்து ஜப்பான் நாட்டின் அகேன் யமாகுச்சியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை 21-15 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமை யமாகுச்சி 21-15 என்ற கணக்கில் வென்று சமன் செய்தார். இதனால் ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடத்தப்பட்டது. 


 






அதில் இரு வீராங்கனைகளும் தொடக்க முதல் சிறப்பாக ஆடி வந்தனர். இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். இதனால் ஆட்டத்தில் கூடுதல் விறுவிறுப்பு அதிகமானது. ஒரு கட்டத்தில் இரு வீராங்கனைகளும் தலா 18 புள்ளிகள் பெற்று இருந்தனர். இறுதியில் அந்த கேமை பி.வி.சிந்து 21-19 என்ற கணக்கில் வென்றார். மேலும் 21-15,15-21,21-19 என்ற கணக்கில் 70 நிமிடங்கள் போராடி ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். 


இதன்மூலம் யமாகுச்சியை 13ஆவது முறையாக தோற்கடித்து அசத்தியுள்ளார். பி.வி.சிந்துவை யமாகுச்சி 8 முறை தோற்கடித்துள்ளார். இந்தாண்டு பி.வி.சிந்துவிற்கு இது 7ஆவது அரையிறுதி போட்டியாகும். இதற்கு முன்பாக 6 முறை அரையிறுதியில் தோல்வி அடைந்தார். குறிப்பாக இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் தொடரில் யமாகுச்சியிடம் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். அந்த தோல்விக்கு தற்போது சிந்து பழிவாங்கியுள்ளார். நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை அன் சியோங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.  


மேலும் படிக்க: இதுல ஹெலிகாப்டர் ஷாட் வேண்டாம்.. இது பேட்மிண்டன் தல..! தோனியின் சனிக்கிழமை ஆட்டம்!!