நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், இந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடக்க உள்ளது. வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ள இந்த போட்டியில்,  இந்தியாவில் இருந்து மொத்தம் 215 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வதாக இருந்தது. இந்திய விளையாட்டு வீரர்கள் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் கலந்து கொள்வதாக இருந்தனர்.


இந்திய வீராங்கனைகள் நீக்கம் !




இந்நிலையில் இந்திய அணியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி 100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் (4*100 மீட்டர்) போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியிருந்தார். 24 வயதான இவர், கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தடகளப் பந்தயத்தில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 23 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத பி.டி.உஷாவின் சாதனையையும்  முறியடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கர்நாடகத்தைச் சேர்ந்த ட்ரிபிள் ஜம்பர் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்று காமன்வெல்த் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஊக்க மருந்து சர்ச்சை :




1983 ஆம் ஆண்டு முதன்முதலில் ஊக்க மருந்து சர்ச்சை எழுந்தது. கனடாவைச் சேர்ந்த தடகள வீரர் பென் ஜான்சன் என்பவர் 100 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்று இருந்தார். ஆனால் சிறுநீர் பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரிடமிருந்து வென்ற பதக்கம் திருப்பி பெறப்பட்டது. அதன் பிறகுதான் ஊக்கு மருந்து குறித்தான விஷயங்களை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினார்கள். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம், பரிசோதனையில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத  ஊக்கம் மருந்துகளை வீரர்கள் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.


அனபாலிக் என்று கூறப்படும் ஊக்க மருந்து ஒரு ஹார்மோன் மருந்து. அனபாலிக் என்பது ஆண்களுக்கு சுரக்கும் ஒரு வகை ஹார்மோன். இந்த ஹார்மோன் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கின்றது. முறையான உடற்பயிற்சியின் மூலம் பெறக்கூடிய இந்த ஹார்மோனை செயற்கை வழியாக மருந்துகளின் மூலம் எடுத்துக் கொள்வதால், அதே பலன்களை அடைய முடியும். எனவே விளையாடும் திறனையும் உத்வேகத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.


அதனால் விளையாட்டு வீரர்கள் இதை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் விதிகளின்படி இது முறைகேடாகவே கருதப்படுகின்றது. எனவே தடை செய்யப்பட்ட மருந்துகள் தெரிந்தோ தெரியாமலோ வீரர்கள் உட்கொண்டால் சோதனையின் போது அது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர். ஒவ்வொரு வருடமும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.அதனை கருத்தில் கொண்டு வீரர்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.