இந்த உலகக் கோப்பை போட்டி முழுவதும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினார் இந்திய அணி வீரர் விராட் கோலி.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கிய உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அதே மைதானத்தில் இன்று (நவம்பர் 19) நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
அதிரடி காட்டிய விராட் கோலி:
கிங் கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார். அதன்படி, மொத்தம் 11 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ளார். இதில், பல்வேறு சாதனைகளை முறியடித்தார். அதில், முக்கியமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசினார் கோலி. இந்த சதத்தின் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அந்த சதத்தின் மூலம் விராட் கோலி மொத்தம் 50 சதம் அடித்துள்ளார்.
6 அரைசதம், 3 சதம்:
இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார். 95.63 என்ற சராசரியுடன் 765 ரன்களை குவித்துள்ளார். மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் விராட் கோலி தான்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 116 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். அதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் எடுத்தார். கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்த தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
அதன்படி, 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 95 ரன்களும், இலங்கை அணிக்கு எதிராக 88 ரன்களும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில்,121 பந்துகளில் 101 ரன்களை குவித்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் எடுத்த விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசினார். அந்த போட்டியில், 113 பந்துகளில் 117 ரன்களை குவித்தார் கோலி.
இவ்வாறாக இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 6 அரைசதம், 3 சதங்களை விளாசினார். மேலும், தான் விளையாடிய உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் சதமும், இறுதிப் போட்டியில் அரைசதமும் விளாசியிருக்கிறார் விராட் கோலி.
மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: திணறும் இந்தியா.. கோலி அவுட்.. மைதானத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய பேட் கம்மின்ஸ்..!