Koneru Humpy: உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.
கோனேரு ஹம்பி சாம்பியன்:
நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில் நடந்த உலக ரேபிட் சாம்பியன்ஷிப் 2024 இல், இந்தியாவின் கோனேர்ய் ஹம்பி இந்தோனேசியாவின் ஐரின் கரிஷ்மா சுகந்தரை ரவுண்ட் 11 இல் வீழ்த்தினார். 2019 இல் மாஸ்கோவில் முதலிடத்தைப் பெற்ற பிறகு ஹம்பியின் இரண்டாவது உலக ரேபிட் பட்டம் இதுவாகும். முன்னதாக, 2023 ஆம் ஆண்டு சமர்கண்ட் ரேபிட் சாம்பியன்ஷிப்பில் இறுதி வெற்றியாளரான அனஸ்டாசியா போட்னருக் உடன் சேர்ந்து கோனேரு ஹம்பி முதலிடம் பிடித்து இருந்தார். தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக் போட்டியில் ஹம்பி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வென்று இருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது, கோனேரு ஹம்பி செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு மேலும் சேர்த்துள்ளார்.
இந்த நிகழ்வின் இறுதிச் சுற்றுக்குச் சென்றபோது, ஹம்பியைத் தவிர, ஜு வென்ஜுன், கேடரினா லக்னோ, ஹரிகா துரோணவல்லி, அஃப்ருசா கம்டமோவா, டான் ஜோங்கி மற்றும் ஐரீன் ஆகிய ஆறு வீராங்கனைகள் 10 சுற்றுகளில் 7.5 புள்ளிகளுடன் போட்டித் தொடரில் முன்னிலை வகித்தனர். ஐரீனுக்கு எதிரான இறுதிச் சுற்றில் ஹம்பி வெற்றி பெறுவதற்கு முன்பாக, மற்ற வீராங்கனைகள் இடையே நடந்த அனைத்து சுற்றுகளும் சமனில் முடிந்தன. இதனால், ஹம்பி இரண்டாவது முறையாக ரேபிட் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.