இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சின் மூலம் பல முறை இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். அத்துடன் சில சமயங்களில் மைதானத்தில் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். எனினும் சிங் இஸ் கிங் என்று நாம் எப்போதும் சொல்லும் அளவிற்கு களத்தில் இவருடைய செயல்பாடு இருந்துள்ளது. இன்று ஹர்பஜன் சிங் தன்னுடைய 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் இவர் செய்த 3 சாதனைகள் என்னென்ன?


முதல் டெஸ்ட் ஹாட்ரிக்:




இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் ஹர்பஜன் சிங் தான். அதற்கு முன்பாக சேத்தன் சர்மா ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர் ஹர்பஜன் சிங் தான் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை படைத்தார். 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத 2001 டெஸ்ட்டில் ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் ஒரு பெரிய பங்கு வகித்தது. 


 


400 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர்:




ரவிச்சந்திரன் அஸ்வின் வருகைக்கு முன்பு இந்திய அணியின் முக்கிய ஆஃப் ஸ்பின்னராக இருந்தவர் ஹர்பஜன் சிங். இவர் 2011ஆம் ஆண்டு தன்னுடைய 400ஆவது விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வீழ்த்தினார். அப்போது 400 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின்னர் 2011 அஸ்வின் அறிமுகத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவின் தலை சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்ற வரிசையில் இவருக்கு எப்போதும் இடம் உண்டு. ஹர்பஜன் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 


ஒரு டி20 போட்டியில் அதிக மெய்டன் ஓவர்:




2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஹர்பஜன் சிங் தேர்வாகி இருந்தார். அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக ஹர்பஜன் சிங் களமிறங்கினார். அந்தப் போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள் வீசி இவர் அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளின் வரலாற்றில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர் வீசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன்பின்னர் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஒரே டி20 போட்டியில் 2 மெய்டன்கள் வீசி இந்த சாதனையை சமன் செய்திருந்தனர். 




இப்படி சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் ஹர்பஜன் சிங் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 150 விக்கெட் உடன் 5ஆவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு களமிறங்கிய ஹர்பஜன் இந்தாண்டு கொல்கத்தா அணியில் களமிறங்கி வருகிறார். 


மேலும் படிக்க: கையை இழந்தார் நம்பிக்கையை இழக்கவில்லை’- மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி ஜஜாரியா !