தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விக்ரம். அவர் இந்த நிலையை அடைய படாதபாடு பட்டவர். சினிமா துறையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலகட்டத்தில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பிரபுதேவா, அஜித், அப்பாஸ் போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசி வந்தார்.


 



தனது நடிப்பு திறமையை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா என்னும் ஏக்கத்தில் இருந்த விக்ரமுக்கு இயக்குநர் பாலாவின் அறிமுக படமான 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அட்டகாசமாக பயன்படுத்தி தனது 200 சதவிகித உழைப்பை அப்படத்திற்காக கொடுத்தார். அவரின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை குவித்ததோடு வெற்றிப்படமாகவும் அமைந்தது. விக்ரம் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 'சேது' படத்தின் வெற்றிக்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.


கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல் நடிப்பு திறமையை நிரூபிக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அப்படி அமைந்த படங்கள் தான் காசி, பிதாமகன் உள்ளிட்ட படங்கள். நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிச்சலான நடிகராக விக்ரம் அறியப்படுகிறார். அது மட்டுமின்றி கமர்ஷியல் படங்களான சாமி, தூள், தில், ஜெமினி உள்ளிட்ட படங்களிலும் பட்டையை கிளப்பினார். சேதுவில் தொடங்கிய விக்ரம் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. 



விக்ரம் வாய்ப்புகள் இன்றி இருந்த சமயத்தில் அவருக்கு நடிகர் அஜித் செய்த உதவி குறித்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. விக்ரம் மற்றும் அஜித் இணைந்து நடித்த படம் உல்லாசம். ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில் நடிக்க அஜித்தை அணுகியபோது அப்படத்தில் மற்றொரு ஹீரோவும் நடிப்பார். அவருக்கும் படத்தில் ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதையும் அதற்காக நடிகர் விக்ரமை முடிவு செய்து இருக்கும் தகவலையும் கூறியபோது சற்றும் தயக்கமின்றி, ”அதனால் என்ன அவரும் என்னை போல கஷ்டப்பட்டு வந்தவர்தான். என்னை விட அவருக்கு அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுங்கள்” என்றும் கூறியுள்ளார் அஜித்.


இந்த விஷயம் கேள்விப்பட்ட விக்ரம் உல்லாசம் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அப்போது அஜித் விக்ரமிடம் நீங்கள் ஒரு நாள் என்னை விட மிகப் பெரிய நடிகராக வர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.