சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் விருதுக்கான பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு ஆக்கி நிபுணர்கள், தேசிய அணிகளின் கேப்டன், பயிற்சியாளர், வீரர்கள், ரசிகர்கள் மற்றும் மீடியாவை சேர்ந்தவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


இந்த ஆண்டுக்கான (2021-22) சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் (இந்தியா), டியூன் டி நூய்ஜர் (நெதர்லாந்து), ஜேமி டுவயர் (ஆஸ்திரேலியா) மற்றும் ஆர்தர் வான் டோரன் (பெல்ஜியம்) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் அதிக வாக்குகள் பெற்று இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங்  சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இவர் பெற்ற வாக்கு சதவீதம் (29.4 சதவீதம்). அவருக்கு அடுத்தபடியாக தியாரி பிரிங்மான் 23.6 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.


26 வயதான ஹர்மன்பிரீத் சிங் சிறந்த வீரர் விருதை பெறுவது இது 2வது முறையாகும். அவர் கடந்த ஆண்டும்  இந்த விருதை பெற்று இருந்தார். இந்திய ஆண்கள் அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா ஆகியோர் சிறந்த கோல்கீப்பர்களாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






இதுகுறித்து  ஹர்மன்ப்ரீத் சிங் கூறுகையில், ”எஃப்.ஐ.எச். சிறந்த வீரர் விருதை வென்றதற்காக நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியுடன்ர் இருக்கிறேன் மற்றும் பெருமைப்படுகிறேன். இது எனது தொழில் வாழ்க்கைக்கு ஒரு பெரிய தருணம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இருப்பினும், இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, இது ஒரு தனிப்பட்ட விருதாக இருந்தாலும், எனது அணியினரின் உதவியும் ஆதரவும் இல்லாமல், இது எப்படியும் சாத்தியமில்லை என்று நான் சொல்ல வேண்டும். எனவே, இது அணிக்கானது.இதுபோன்ற மதிப்புமிக்க விருதை வென்றதன் மூலம் எனது விளையாட்டில் கடினமாக உழைக்க என்னை ஊக்குவிக்கிறது இதனால் நான் தொடர்ந்து பல உயரமான நிலைகளுக்கு செல்ல முடியும்” என்றார். 






FIH ஹாக்கி ப்ரோ லீக் 2021-22 இல் இரண்டு ஹாட்ரிக்குகளுடன் 16 ஆட்டங்களில் 18 கோல்கள் அடித்து இந்தியாவுக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் பெற்றார். மேலும், புரோ லீக்கின் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


கடந்த 2021 ம் ஆண்டு ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் 6 ஆட்டங்களில் 8 கோல்களை ஹர்மன்ப்ரீத் அடித்தார். பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு அவரது செயல்பாடுகள் முக்கியமானவை.


உலகின் சிறந்த வீராங்கனை விருதுக்கு 22 வயது நெதர்லாந்து ஆக்கி அணி வீராங்கனை பெலிசி அல்பெர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.