உலகின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரர்களாக வலம் வருபவர் கார்ல்சன். உலக செஸ் சாம்பியனாக வலம் வந்த கார்ல்சன் தற்போது ஆன்லைன் மூலமாக செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறார்.
உலக செஸ் சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. 16 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 16 வயது நிரம்பிய சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா கார்ல்சனுக்கு மிகுந்த நெருக்கடி அளித்தார். இதனால், கார்ல்சன் சற்று நெருக்கடிக்கு ஆளாகினார். நான்கு சுற்றுகள் முடிந்த நிலையில், 5வது சுற்றில் கார்ல்சன் குதிரையை தவறுதலாக நகர்த்தினார். இதை தனக்கு சாதகமாக்கிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
இதனால், பிரக்ஞானந்தா தன்னுடைய 41வது நகர்த்தலிலே கார்ல்சனை வீழ்த்தினார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். சதுரங்க சாம்பியன் தொடருக்காக ஏற்கனவே மூன்று தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது 4வது சுற்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி விரைவில் நடைபெற உள்ள நிலையில், நம்பர் 1 வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா இரண்டாம் முறையாக வீழ்த்தியிருப்பதற்கு முன்னணி வீரர்கள் மற்றும் செஸ் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்