சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திச் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பரபாஸ் மெண்டல் (44) மற்றும் நமீதா (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் ஆகியோர் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நேற்றிரவு ஒரிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அங்கேயே அந்த தம்பதியினர் தூங்கி உள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு மணி அளவில் எழுந்து பார்க்க ஆண் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.





ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்து குழந்தை கிடைக்காமல் போனதால் சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுவது தெரியவந்தது.


ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்த போது மதுரவாயல் அடுத்த பகுதியில் அந்த நபரை இறக்கி விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சென்ட்ரல் ரயில் போலீசார் குழந்தையை மிட்க தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குழந்தை கடத்தப்பட்ட சுமார் 4 மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை குன்றத்தூஎ அருகே மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.


குழந்தையை பெற்ற நந்தினி மற்றும் லங்கேஸ்கர் போலீசாரை பார்த்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரபாஸ் மெண்டல் (44) மற்றும் நமீதா (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில்ல் வடக்கு டோல்கேட் அருகே கடந்த 5 ஆம் தேதியன்று பெண்கள் குளிக்கும் இடம் கன்னியாகுமரியை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் 1 1/2 வயது ஆண் குழந்தை ஹரிஷ் காணாமல் போனது. குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குழந்தை கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துராஜ் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.


காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (43) மற்றும் அவரது மனைவி திலகவதி (35) ஆகியோர் குழந்தையை கடத்தி இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் பாண்டியன், திலகவதி ஆகியோர் கோவை ஆலந்துறை பூண்டி சாலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஆலந்துறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் பூண்டி முட்டத்துவயல், குளத்தேரி அருகே குளித்துக் கொண்டு இருந்த பாண்டியன், திலகவதி ஆகிய இருவரை ஆலாந்துறை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் குழந்தையை திருடியது ஒப்புக் கொண்டனர். மேலும் அந்த குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். அவர்கள் கொடுத்த முகவரியை வைத்து சேலத்தில் பாண்டியனின் தாயார் பச்சையம்மாள் இருந்த ஹரிஷை காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.