இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனே அவர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு சென்றவர்களும் தனிமையில் இருந்து பின்னரே வலைப்பயிற்சியை தொடங்கவுள்ளனர்.  ஜூலை 20 முதல் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து சென்ற இரு வீரர்களுக்கு கொரொனா பாசிட்டிவ் என செய்தி வெளியானது. ஏ என் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இரு வீரர்களையும் சோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா இல்லை என்றும், மற்றொரு வீரருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் குறிப்பிட்டது. ஆனால் எந்த வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த ஒரு வீரர் ரிஷப் பண்ட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 




பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த வீரரையும் பெயரையும் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த ஒரு வீரர் ரிஷப் பண்ட் எனவும், அவர் தற்போது தனிமையில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அவருக்கு மீண்டும் வரும் ஞாயிறு சோதனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.  சமீபத்தில் இங்கிலாந்து-ஜெர்மனி இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண ரிஷப் பண்ட் சென்றிருந்தார். மாஸ்க் அணியாமல் நண்பர்களுடன் அவர் இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து பேசிய பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா, ஒரு இந்திய வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் விடுதியில் தங்கவில்லை. எனவே மற்ற வீரர்களுக்கு பிரச்சனை இல்லை. பாதிக்கப்பட்ட வீரரின் பெயரை தற்போது வெளியிடமுடியாது என்றார்




கொரோனா காலம் என்பதால் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. எதிர்வரும் ஒலிம்பிக்கும் கொரோனாவால் பல சிக்கல்களை சந்தித்துள்ளது.


2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹே, “ஆகஸ்டு 22-ம் தேதி வரை, டோக்கியோவில் அவசரநிலை கடைபிடிக்கப்படும்” என அறிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.