ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார். இவர் 8ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச் வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 19 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் முதல் முறையாக உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஏர்திங்க்ஸ் ஆன்லைன் தொடரில் 8 புள்ளிகளுடன் 8 போட்டிகளின் முடிவில் 12ஆவது இடத்தில் உள்ளார். இந்தத் தொடரின் முதல் சில போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடவில்லை. லெவ் அர்னோனியை மட்டும் இந்தத் தொடரில் இதுவரை தோற்கடித்திருந்தார். அதன்பின்னர் இந்தத் தொடரில் இவர் 2 டிரா மற்றும் 4 தோல்வியை பெற்றுள்ளார். முதல் சுற்றில் மொத்தம் 15 போட்டிகள் உள்ளன. தற்போது வரை பிரக்ஞானந்தா 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்னும் 7 போட்டிகள் முதல் சுற்றில் மீதியுள்ளது. தற்போது வரை 19 புள்ளிகளுடன் மெக்னஸ் கார்ல்சன் முதல் இடத்தில் உள்ளார்.
ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இம்முறை 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் ஒரு வீரருக்கு 15 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும் டிரா செய்தால் ஒரு புள்ளியும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்