இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டை பற்றி குறிப்பிடும்போதும் சில வீரர்கள் அதற்கு அடையாளமாக திகழ்வார்கள். இந்தியாவில் குத்துச்சண்டை என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது மேரி கோம் ஆவார். ஆண்களை காட்டிலும் குத்துச்சண்டை போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாடுகள் மூலம் உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்று புகழ்பெற்றவர்.


மேரி கோம் ஓய்வு:


இவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார்.  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேரி கோம் இந்த அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அந்த நிகழ்ச்சியில் பேசிய மேரி கோம், “ எனக்கு இன்னும் பசி உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக வயது வரம்பு முடிந்துவிட்டது. இதனால், என்னால் இனி எந்த போட்டியிலும் பங்கேற்க இயலாது. நான் அதிகமாக விளையாட விரும்புகிறேன். ஆனால், நான் வயது வரம்பு காரணமாக வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நான் ஓய்வு பெற வேண்டும். நான் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


காரணம் என்ன?


மேரி கோம் எடுத்துள்ள இந்த அதிர்ச்சிகரமான முடிவுக்கு சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் கொண்டு வந்துள்ள வயது வரம்பே காரணம் ஆகும். சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் கொண்டு வந்துள்ள புதிய விதிப்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை வீரர்களும், வீராங்கனைகளும் போட்டிகளில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40 மட்டுமே என்று அறிவித்துள்ளது. மேரி கோமிற்கு தற்போது 41 வயது ஆகிறது. இதனால், அவர் இனி சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க இயலாது.


மேரி கோம் திடீரென குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலக குத்துச்சண்டை வரலாற்றில் மேரி கோம் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய வீராங்கனை யாருமே இல்லை என்றே சொல்ல வேண்டும். உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்ற ஒரே வீராங்கனை மேரி கோம் மட்டுமே ஆவார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தையும் 5 முறை வென்ற ஒரே வீராங்கனையும் மேரி கோம் மட்டுமே ஆவார். 2014ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.


ரசிகர்கள் வருத்தமும், வாழ்த்தும்


2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கல பதக்கம் வென்றும் அசத்தியுள்ளார்.  18 வயதில் சர்வதேச குத்துச்சண்டையில் களமிறங்கிய மேரி கோம் கடந்த 23 ஆண்டுகாலமாக இந்தியாவிற்காக பல்வேறு போட்டிகளில் களமிறங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து மேரி கோம் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும்,  அவர் நாட்டிற்காக பெற்ற வெற்றிகளுக்காகவும், பங்கேற்ற போட்டிகளுக்காகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தன்னுடைய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும், அவ்வாறு ஓய்வு பெறும்போது அனைவர் முன்பும் முறைப்படி அறிவிப்பேன் என்றும் இன்று மேரிகோம் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும் படிக்க: Tamil Thalaivas vs Telugu Titans: சரவெடி.. 25 புள்ளிகள் வித்தியாசம்; தெலுகு டைட்டன்ஸை ஊதித்தள்ளி தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி


மேலும் படிக்க: Big Bash League: 11 ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மகுடத்தை சூடிய பிரிஸ்பேன் ஹீட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!