உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி, இந்திய வீரர் பிரனாய் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்:


28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று அனைத்தும் நிறைவடைந்த நிலையில், காலிறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் காலிறுதி ச் சுற்றில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான பிரனாய், ஒமிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றதோடு, நடப்பு உலக பேட்மிண்டன் சாம்பியனனான டென்மார்க்கை சேர்ந்த விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.






அபார வெற்றி:


அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்செல்சன், முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட பிரனாய், அடுத்த இரண்டு செட்களையும் 1-15, 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி, நடப்பு சாம்பியனான அக்செல்சனை வீழ்த்தி, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்த தொடரில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தொடர்ந்து அரையிறுதிப்போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த குன்லவுட் விடிசார்ன் என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.50 மணியளவில் தொடங்க உள்ளது.


சாதனைகள்:


காலிறுதியில் வென்றதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின், ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை பிரனாய் பெற்றுள்ளார். அதோடு, இந்த தொடரில் கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த தொடரில் இந்தியா குறைந்தது ஒரு பதக்கமாவது வென்று விடும் என்ற சாதனை பயணத்தையும் நீட்டித்துள்ளார். இதனால், உலக பேட்ட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு 14வது பதக்கம் உறுதியாகியுள்ளது.


மீண்டும் வெற்றிப்பாதை..


அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய பேட்மிண்டன் ஓபன் தொடரில் பிரனாய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அதிl சீன வீரர் வெங் ஹாங் யாங் எதிர்கொண்டபோது, 9-21, 23-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்த பிரனாய், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கான பதக்கத்தை இறுதி செய்துள்ளார். இதனிடையே, இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது.