இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல்-ரவுண்டராக அவதாரம் எடுத்திருப்பவர் ஷர்துல் தாக்கூர். இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஓவலில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தவர். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு ஷர்துல் தாக்கூர் அளித்த பேட்டியை கீழே காணலாம்.
“ ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இங்கிலாந்து தொடரில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், எதிர்பாரதவிதமாக என்னால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியவில்லை. ஆனால், நான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆட தயாராக இருந்தேன். ட்ரென்ட் பிரிட்ஜில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டபோதும், பேட்டிங்கில் விரைவாக ஆட்டமிழந்தேன்.
நான் வலைப்பயிற்சியின்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டிலும் தீவிரமாக ஈடுபட்டேன். ஆனால், அடுத்த போட்டியில் நான் விளையாடவில்லை. மொத்தமாக இந்த தொடர் எனக்கு நன்றாகவே இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது கணுக்காலில் காயம் ஏற்பட்ட பிறகு, நான் எனது பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்தேன். கீழ்வரிசை பேட்டிங்கில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று எனது திறனை வளர்த்துக் கொள்ளவும், என்னை முன்னோக்கி எடுத்துச்செல்லுவும் முடிவு செய்தேன்.
“என்ன நடந்தாலும் நீ பேட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கீழ்வரிசை வீரர்களின் பேட்டிங் பங்களிப்பு எப்போதும் எனக்கு உதவிகரமாக உள்ளது. 40-50 ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடும். இந்திய அணிக்கு திரும்பிய பிறகு, நான் வலைப்பயிற்சியில் ரகு மற்றும் நுவனின் பந்துவீச்சில் பேட்டிங் பயிற்சி எடுத்தேன். தொடக்கத்தில் என்னால் அவர்களுக்கு எதிராக விளையாட முடியவில்லை. பின்னர், எனது கால்நகர்வை வளர்த்துக் கொண்டு படிப்படியாக பேட்டிங்கை வளர்த்துக் கொண்டேன்.
நான் இதுவரை அடித்த ரன்கள் எதுவாக இருந்தாலும், நான் பின்பற்றிய ஒரு செயல்முறை இருந்தது. இது தற்செயலோ அல்லது அதிர்ஷடமோ அல்ல. இந்திய அணி நிர்வாகமும், விராட் கோலி, ரோகித்சர்மா என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தனர். அவர்கள் எப்போதும் என்னிடம் எப்போது பேட்டிங் செய்தாலும், பேட்ஸ்மேனை போல சிந்திக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஒருமுறை தோனியின் அறையில் தோனியின் பேட்டிங்கை பிடித்துக்கொண்டிருந்தபோது, தோனி என்னிடம் “உனது பேட்டிங் கிரிப் மிகவும் உயரமாக உள்ளது. நீ பேட்டிங் கிரிப்பின் கீழே பிடித்து பேட் செய். அப்போதுதான் உன்னால் நீ அடிக்கும் ஷாட்டை கட்டுப்படுத்த முடியும்” என்றார். இப்போது அப்படித்தான் பேட் செய்கிறேன். அது உதவிகரமாக உள்ளது.
ஓவலில் நான் பேட் செய்ய விரைவாகவே சென்றபோது ஒரு கடினமான சூழல் இருந்தது. ஸ்கோர்போர்டை பார்த்து ஆட்டத்தின் சூழலை உணர்ந்து கொண்டேன். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தபோதும், நான் எனது ஷாட்களை ஆடவில்லை. அங்குமிங்குமாக சிங்கிள்ஸ்களை எடுத்தேன். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பிறகு, ரன்கள் மிகவும் முக்கியம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். தாக்குதல் ஆட்டம் மட்டுமே சிறந்த தேர்வு என்று உணர்ந்தேன். அதன்படியே ஆடினேன்.
ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பு எனக்கென்று எந்த மூடநம்பிக்கைகளும் கிடையாது. மூடநம்பிக்கைகளை காட்டிலும் எனது ஆட்டத்தையே நான் நம்புகிறேன். ஓவல் டெஸ்டிற்கு பிறகு, லார்ட் தாக்கூர் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வந்ததை கண்டு மிகவும் ரசித்தேன்.
தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் நான் மூன்று ஆண்டுகளாக ஆடியுள்ளேன். அவர் அணிக்கு நிறைய திட்டங்களை அளிப்பார். விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரிக்கு தோனியின் வருகை உதவிகரமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.