தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் பலவும் இன்று ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வித்தியாசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஔிபரப்பி வருகின்றனர். நாடகங்கள், திரைப்படங்கள், நகைச்சுவைகள் என்று இருந்ததை மாற்றி ரியாலிட்டி ஷோக்கள், பாட்டு மற்றும் நடனப் போட்டிகள், கேம் ஷோக்கள் என்று ஒளிபரப்பி வருகின்றனர். இந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளனர். டிஸ்கவரி தொலைக்காட்சியில் வரும் ‛நேக்ட் அண்ட் அப்பையர்ஸ்’ நிகழ்ச்சியை அப்படியே தமிழுக்கு ஏற்றார் போல் காப்பி அடித்தாலும், எந்த சமரசமும் இல்லாமல் அதே தரத்தில் நிகழ்ச்சியை எடுத்துள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளார். தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காடர், வேடர் என்ற இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தற்போது தனித்தனி தீவுகளில் இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நான்காவது நாள் எபிசோட் இன்று நடந்தது. 




 நேற்று காடர், வேடர் அணிகளுக்கான ட்ரைப் லீடர் தேர்வுக்கான போட்டிகள் நடந்த நிலையில் காடர் அணியில் காயத்ரியும், வேடர் அணியில் லெட்சுமியும் வெற்றி பெற்று அணிகளின் தலைவராயினர். இந்நிலையில் தலைவர் தேர்வுக்குப் பின் இரண்டாவது நாளில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றது. 


இரு அணிகளும் தங்களின் உணவு, தங்குமிடம் அமைப்பதில் ஆர்வம் காட்டினர். வேடர் அணிக்கு தீ மூட்ட எதுவும் இல்லாததால் சமைக்க சிரமப்படுகின்றனர். இதனால் தீவில் கிடைத்த கிழங்கை வைத்து உணவை சமாளித்தனர். காடர் அணியில் நெருப்பு இருந்ததால், ரொட்டி சுட்டி உணவை முடித்தனர். குடும்பத்தை நினைத்து பெசன்ட் ரவி கதறி அழுதார். கண்ணீர் வடித்தார். அவரை சக போட்டியாளர்கள் தேற்றினர். அதே போல் அம்ஜத் கானும் தனது மகளை எண்ணி வருத்தம் கொண்டார். 




கனமழை... தவித்த போட்டியாளர்கள்!


தங்கும் இடம் அமைப்பதற்குள் தீவில் கடும் மழை கொட்டியது. இதனால் வேடர் அணியின் சிருஷ்டி, பார்வதி, ஐஸ்வர்யா ஆகியோர் மழையில் பாடல்பாடி கொண்டாடினர். மற்ற போட்டியாளர்கள் மழை தந்த தொல்லையை ரசிக்கவில்லை. வருந்தினர். ஆனால் காடர் தங்கிய தீவில் மழையில்லை. எனவே அவர்கள் டாஸ்க் குறித்து ஆலோசித்தனர். திட்டமிட்டனர். 


இந்த்ரஜாவை நினைத்து வருந்திய விஜயலட்சுமி!


இந்த்ரஜா அணியில் பலவீனமாக இருக்கிறார் என லீடர் காயத்ரியும், விஜயலட்சுமியும் பேசிக்கொண்டனர். அவர் துவக்கத்திலிருந்து டாஸ்க் செய்ய சிரமப்படுகிறார் என பகிரங்கமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் அவரை வைத்து தான் சமாளிக்க வேண்டும் என பேசிக்கொண்டனர்.




ரிவார்டு சேலஞ்:


இதற்கிடையில் இரு தீவுகளிலும் போட்டியாளர்கள் பார்வையில் படும் படி பாட்டில் ஒன்றில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதை இரு அணியில் இருந்தும் ஒருவர் எடுத்தனர். அதில் ரிவார்டு சேலஞ் குறித்த அறிவிப்பு இருந்தது. அதற்கு முன் அர்ஜூன் இரு அணியினரை சந்தித்து இரவு அனுபவத்தை கேட்டறிந்தார். காடர் அணியின் விஜயலட்சுமி கடல் அலை சத்தத்தால் தூங்க சிரமப்பட்டதாகவும், இரவில் அழுததாக தன் அனுபவத்தை கூறினார். அதே போல வேடர் அணியில் மழையால் சிரமம் அடைந்ததாக நந்தா தனது குழுவினர் அனுபவத்தை கூறினார். பின்னர் சேலஞ்ச் தொடங்கியது. பெட்டிக்குள் இருக்கும் கட்டைகளை எடுத்து வந்து அதை மேலே கட்டியுள்ள கயிற்றின் கீழ் கட்டி, கட்டையை கொளுத்தி, அந்த தீ மூலம் கட்டப்பட்டுள்ள கயிறை ‛கட்’ செய்வது தான் டாஸ்க். கட்டையை சேகரிப்பதிலும் டாஸ்க் இருந்தது. விறகுகளை சேகரிப்பதில் வேடர்கள் அணி சிறப்பாக செயல்பட்டனர். விக்ராந்த் தலைமையிலான காடர் அணி கடும் சிரமம் அடைந்தது. ஆனால் மூன்று நாட்கள் சமைக்க முடியாமல் கிடைத்ததை உண்டு பலவீனமாக இருந்த வேடர் அணி, மும்முரமாக செயல்பட்டது. 




போராடி வெற்ற வேடர்கள்!


இருவர் அடுக்கி பற்ற வைத்த விறகுகளும் சரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்களின் போராட்டம் கேள்விக்குறியானது. இதைத் தொடர்ந்து எரிந்த கட்டையை எடுத்து நேரடியாக கயிறை எரிக்கலாம் என அர்ஜூன் கூறினார். உடனே கொளுத்தும் வெப்பத்தில் அணியினர் போட்டி போட்டு கயிற்றை எரிக்க முயற்சித்தனர். அதுவும் போராட்டமாகவே இருந்தது. இறுதியில் வேடர் அணி வெற்றிகரமாக கயிற்றை எரித்தனர். பின்னர் அந்த வெற்றியை ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, கண்ணீர் விட்டு தங்கள் வெற்றியை கொண்டாடினர். மூன்று நாட்களுக்குப் பின் உணவு கிடைக்கப் போகிறது என்கிற ஆசையில் அவர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் அர்ஜூனிடம் பேசிய நந்தா, ‛சார்... சாப்பிட எதுவுமே இல்லை.. பால் கூட கெட்டுப்போச்சு... ரொம்ப கஷ்டமா இருக்கு...’ என உருக்கத்துடன் கூறினார்.




வெற்றி பெற்ற அவர்களுக்கு தீ மூட்டும் கருவி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாற்காலி, தார்பால், போர்வை, அரிவாள் உள்ளிட்டவை ரிவார்டு பரிசாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகிழ்ச்சியாக வேடர்கள் அணியினர் தீவு திரும்பினர். ஏமாற்றத்துடன் காடர்களும் தீவு திரும்பினர். நாளை எபிசோட் இன்னும் விறுவிறுப்பாய் இருக்கும் என்றே தெரிகிறது. அநேகமாக அது தோல்வி அடைந்த காடர்கள் பக்கம் இருக்கலாம்.