இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் இதே நேரத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் அணி, போராடி போட்டியை டிரா செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளான மித்தாலி ராஜ் மற்றும் ஜூலன் கோசாமி ஆகியோருடன் இணைந்து களமிறங்கிய அறிமுக வீராங்கனைகள் சிலரும் தங்களது சிறப்பான அட்டத்தால் கவனிக்க வைத்தனர்.
பிரிஸ்டோலில் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 231 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய மகளிர் அணி, போட்டியை இழக்காமல் டிரா செய்ய வழிவகுத்துள்ளார் அறிமுக வீராங்கனை ஸ்னே ரானா.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம், ஷஃபாலி வெர்மா, தீப்தி ஷர்மா, ஸ்னே ரானா உள்ளிட்ட வீராங்கனைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.
தானியா பாடியாவுடன் (44*) 9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராணா (80*) கூட்டணி இந்திய அணியை காப்பாற்றியுள்ளனர். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 50+ ரன்களும், 4 விக்கெட்டுகளும் எடுத்த நான்காவது வீராங்கனையானார். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இச்சாதனையை படைப்பது இதுவே முதல் முறையாகும். மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவதாக களமிறங்கி அதிகபட்ச ரன்களை ஸ்கோர் செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்னே ரானா, 2014 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு, டி-20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்ட ஸ்னே ரானா, இந்த ஆட்டத்தை மறைந்த அவரது தந்தைக்கு டெடிகேட் செய்துள்ளார்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய தந்தையை இழந்தேன். நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என விரும்பினார். அதை அவர் காணமல் சென்றுவிட்டார். இப்போதும் இதற்கு பிறகும் கிரிக்கெட்டில் நான் சாதிக்க இருக்கும் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என ஸ்னே ரானா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஸ்னே ரானாவின் இந்த அறிமுக ஆட்டத்திற்கு சேவாக் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட்டர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட தோற்காத இந்தியா அணி இந்த போட்டியையும் டிரா செய்து அந்த சாதனையை தக்க வைத்துள்ளது.