இளையராஜாவை போலவே அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தந்தை பிரபலமான இசையமைப்பாளராக இருந்தாலும், யுவன் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.  ரசிகர்களால் U1 என அழைக்கப்படும் யுவனின் இசைக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்ற எண்ணவோட்டம் ரசிகர்கள் மத்தியில் உண்டு.  கடந்த 2015 ஆம் ஆண்டு ஸஃப்ரூன் நிஸார்  என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட யுவன் , தானும் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு ஸியா என்ற பெண்குழந்தை உள்ளார்.


 



இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக, அவர்களின் அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்தினை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் , தனது சமூக வலைத்தள பக்கங்களில்   #HappyFathersDay என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ” என் குட்டி புகைப்பட கலைஞரை சந்தியுங்கள் “ என  குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் யுவனை மகள் ஸியா புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர் “ இங்க எத்தனை போட்டோகிராஃபர்ஸ் இருக்காங்க “ என  ஸியாவையும் சேர்த்து  கணக்கிடுகிறார். இதனை கண்ட ஸியா குட்டி மழலை மொழியில் ஏதோ கூற , மகளை ரசித்தபடி இருக்கிறார் யுவன். அந்த இடத்தில் இரண்டு மூன்று புகைப்பட கலைஞர்கள் இருந்தும் தன் மகளின் கேமராவிற்கே யுவன் ரசித்து போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது யுவன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.






 
முன்னதாக ஸியாவின் கைகளை பிடித்து அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தார் யுவன்.  அதில் “ மிருகத்துடன் ஒரு பொம்மை “ என கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த வீடியோவில் யுவன் இசையமைத்த ”ஆனந்த யாழை மீட்டுகிறாய் ” என்ற பாடல் வீடியோவின் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும். மகளின் கைகளை பிடித்து நடந்து செல்லும் காட்சிக்கும் அந்த பாடலின் வரிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் இந்த வீடியோ அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.  தந்தைகளை கொண்டாடுவதற்கு தகுந்த பாடல் வரிகளை கொண்டிருக்கும் பாடல்தான் “ஆனந்த யாழை மீட்டுகிறாய் “ இந்த பாடலுக்கு அத்தனை இனிமையாக இசையமைத்திருப்பார் யுவன் . இந்த பாடல் இயக்குநர் ராம், இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'தங்க மீன்கள் படத்தில் இடம் பெற்றிருந்தது. அப்பா - மகளின் ஆழமான பாசத்தை பற்றி எடுத்துரைக்கும் வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம்  தேசிய விருதை பெற்றது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார்.  மேலும் இந்த பாடலை எழுதிய நா.முத்துக்குமார் வரிகளில்  அமைத்திருந்த 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்கு மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாருக்கு பல விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.