இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பட்டோடி தொடரை இந்தியா வெல்லுமா? அல்லது இங்கிலாந்து சமன் செய்யுமா? என்ற பரபரப்பான சூழலில் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஓல்ட் ட்ராபோர்டில் தொடங்க உள்ளது. மான்செஸ்டர் நகரத்தில் அமைந்துள்ள ஓல்ட் ட்ராபோர்ட் மைதானம் இங்கிலாந்தின் லார்ட்ஸ், ஓவல் மைதானங்களைப் போலவே பழமையானது. இந்த மைதானத்தில் இந்திய அணி கடந்த 1936ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிராக 1936ம் ஆண்டு ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி டிரா செய்தது.




கடந்த 85 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. ஆனால், 85 ஆண்டுகளில் இந்தியா ஒருமுறை கூட ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் வெற்றிக்கனியை பறித்ததில்லை. இங்கு நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக 2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துடன் மோதியது. அந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடாத காரணத்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த மைதானம் 1936ம் ஆண்டு முதலே பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாகவே இருந்து வந்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு சதங்களை பதிவு செய்துள்ளனர். இந்திய அணி சார்பில் 9 டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் 13 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது.




இந்திய அணி சார்பில் இந்த மைதானத்தில் விஜய் மெர்சன்ட், முஷ்டாக் அலி, அப்பாஸ் அலி பயக், பாலி உம்ரிகர், சுனில் கவாஸ்கர், சந்தீப் பட்டேல், முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் 179 ரன்களை ஒரே இன்னிங்சில் அடித்துள்ளார். இந்திய அணி சார்பில் 1990ம் ஆண்டு இந்த மைதானத்தில் கடைசி சதம் அடிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் இந்த மைதானத்தில் சதம் அடிக்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. சதங்களில் சதம் கண்ட சச்சின் டெண்டுல்கர் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை இந்த மைதானத்தில்தான் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இங்கிலாந்து அணி சார்பில் வாலி ஹாமண்ட், லியோனார்ட் ஹாட்டன், ஜாப் புல்லர், மைக் ஸ்மித், இல்லிங்வொர்த், பிரையன் லக்கார்ட்ஸ், ஜெப் ப்ளெட்சர், ஜான் எட்ரிச், இயான் போத்தம், கிரகாம் கூச், மைக் ஆதர்டன், ராபின் ஸ்மித், ஆலன் லாம்ப் ஆகியோர் சதமடித்துள்ளனர். அந்த அணி சார்பிலும் இந்தியாவிற்கு எதிராக சதம் அடிக்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த மைதானத்தில் இந்திய அணி குறைந்தபட்சமாக 58 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக 432 ரன்களை குவித்துள்ளது.


இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணி கடந்த கால சோக வரலாறு பலவற்றையும் இந்த தொடரில் மாற்றியுள்ளது. அதற்கு லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதான வெற்றிகளே சிறந்த உதாரணம். இந்த நிலையில், ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் தொடரும் 85 ஆண்டுகால சோக வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.