India vs England 4th Test: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவாகவே, லார்ட்சில் இந்தியாவும், லீட்சில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து, தொடரின் முக்கியமான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பெளலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி விவரம்: கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரஹானே, புஜாரா, ராகுல், பண்ட், பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ்
இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), பர்ன்ஸ், ஹசீப், மாலன், போப், பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்த போட்டியில் அஷ்வின் விளையாடுவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் அஷ்வின் இடம் பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.
ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.