'மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ  அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்படுவர் தான் மதுரை 292- வது ஆதீனம். தமிழ்நாட்டில் முக்கிய நபர்களில் வரிசைப்பட்டியலில் இருக்கும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலம்குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு 9:33 மணிக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் நிலை சவாலக இருந்ததால் 12-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று 13-ம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.



இதனால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அருணகிரிநாதரின் உடல் ஆதீன மடத்தின் உட்புறத்தில்  சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  இதற்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் , இளைய மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மரியாதை செய்தனர். மேலும் நிதிஅமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



இதனை தொடர்ந்து ஆதினத்தின் உடலுக்கு மீனாட்சியம்மன் கோவில் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4 கோவில்களில் இருந்துகொண்டுவரப்பட்ட புனித நீரால் அபிஷகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து ஆதீன மடத்தில் இருந்து அவரது உடல் பூப்பல்லக்கில் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம், தருமபுர ஆதினம், குன்றக்குடி அடிகளார் ஊர்வலமாக வந்தவாறு உடல் எடுத்துச்செல்லப்பட்டது.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளை வலம் வந்து பின்னர் காமராஜர் சாலை வழியாக முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து தருமபுர ஆதினம் திருச்சி ஆதினம் , காமாட்சிபுரி ஆதினம் , வேளாக்குறிச்சி ஆதீனம் , குன்னக்குடி ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள் பல்வேறு அபிஷேக சம்பராதயங்கள் செய்யப்பட்டு பின்னர் அமர்ந்த நிலையிலயே நல்லடக்கம் செய்யப்பட்டது.





சர்ச்சைக்கு சற்றும் சோடை போகாத நித்தியானந்தா, ஆதீனம் அருணகிரிநாதர் மருத்துமனையில் இருந்த போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு பூகம்பத்தை கிளம்பினார்.  292-வது ஆதீனம் இறப்பிற்கு பின் என்ன செய்யபோகிறாரோ என என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் 293-வது ஆதீனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு 10 நாட்களில் முடிசூட்டப்படும் என மற்ற ஆதீனங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.