இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடர்தான் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் தொடர் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது. 


இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடும். இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு, கவுண்டி லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த போட்டியில், இந்தியாவின் கே.எல் ராகுல் 101 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இந்திய அணியைப் பொருத்தவரை, மயாங்க் அகர்வாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ராகுல் ஓப்பனிங் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது, ஹனுமா விஹாரி இந்திய அணிக்கு ஓப்பனிங் ஆடுவார் என தெரிகிறது. 






தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சேனா நாடுகளில் களமிறங்கி இந்தியா விளையாடி உள்ள டெஸ்ட் போட்டிகளின் சமீபத்திய ரெக்கார்டுகளின்படி, முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு சொதப்பலாகவே இருந்துள்ளது. இந்த ரெக்கார்டை இந்திய அணி மாற்றியமைக்க, இந்திய அணி இன்று வியூகம் வகித்து விளையாடும் என எதிர்பார்க்கபடுகிறது.


இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் யார் என்பது தெரியாதது போல, கேப்டன் விராட் கோலி தேர்ந்தெடுக்க போகும் வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்பதும் இன்று தெரியும். முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா அணியின் இடம் பெற்றுவிடுவார்கள் என்ற நிலையில், இஷாந்த் - ஷர்துல் -சிராஜ் ஆகியோரில் இருந்து யாரை கேப்டன் தேர்ந்தெடுப்பார் என்பதை பார்க்க வேண்டும். 






இதுவரை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றுள்ள 63 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 23 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 17 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 658/8 என்ற ஸ்கோரை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வானிலை அறிக்கை:


ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம் இருக்கும் இடத்தை பொருத்தவரை, போட்டியின் முதல் நாளன்று வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்த நாட்களின்போது போட்டியின் நடுவே மழை குறுக்கிடும் என தெரிகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நடைபெறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.



உத்தேச இங்கிலாந்து அணி விவரம்: பர்ன்ஸ், சிப்ளி, கிராலி, ஜோ ருட் (கேப்டன்), போப் / பேர்ஸ்டோ, லாரன்ஸ், ஜோஸ் பட்லர், ராபின்சன், மார்க் வுட், ஸ்டூவார்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்


உத்தேச இந்தியா அணி விவரம்: ரோஹித் ஷர்மா, ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட், அஷ்வின், சிராஜ், இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா


முதல் டெஸ்ட் போட்டி, மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. சோனி லைவ் சேனல்களில் இப்போட்டியை நேரலையில் காணலாம்.