லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பட்டோடி டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுலில் அபார சதத்தால் 364 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் தனித்துவமான ஆட்டத்தால் 391 ரன்களை குவித்தது. இதனால், இங்கிலாந்து அணி இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.


இந்த நிலையில். ஆட்டத்தின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டத்தின் 4வது நாளான இன்றைய ஆட்டத்தை இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்திஷர்மா மணியடித்து தொடங்கி வைத்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சை ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தொடர்ந்தனர். கே.எல்.ராகுல் இந்த இன்னிங்சில் ரன்கள் எடுக்க மிகவும் தடுமாறினார். அணியின் ஸ்கோர் 18 ஆக உயர்ந்தபோது மார்க் உட் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.




ரோகித் சர்மா முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் தனது ஆட்டத்தை அதிரடியாகவே தொடங்கினார். அவர் மார்க் வுட் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரில் தனது பாணியில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். ஆனால், மார்க் வுட் வீசிய அடுத்த பந்திலும் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு மொயின் அலி கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


பின்னர், கேப்டன் விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். அணி மிகவும் இக்கட்டான நெருக்கடியில் இருந்ததால், கோலி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போட்டியிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 31 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் சாம்கரன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. பின்னர், துணைகேப்டன் ரஹானே, புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார்.




உணவு இடைவேளை நிறைவடைந்து, இந்திய அணி தற்போது 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்து ஆடிவருகிறது. புஜாரா 5 ரன்களுடனும், ரஹானே 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க்வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய அணி தற்போது வரை இங்கிலாந்தை விட 34 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும் அல்லது இந்த போட்டியை டிரா செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மட்டுமே இனி நம்பிக்கை தரும் ஆட்டக்காரர்களாக உள்ளனர்.