இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சின் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி 25 ரன்களுடன் தங்களது ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர் பும்ராவும், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் தொடர்ந்து குடைச்சல் அளித்தனர். தொடக்க வீரர்கள் ரோரி பர்னஸ், டொமினிக் சிப்ளி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜாக் கிரவ்லியும் 6 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினர். ஜானி போர்ஸ்டோவுடன் களம் சேர்ந்த ஜோ ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் ஜானி பார்ஸ்டோ, 30 ரன்களுக்கும், டேனியல் லாரன்ஸ் 25 ரன்களுக்கும், ஜாஸ் பட்லர் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர், சாம் கரன் களமிறங்கி சற்று நிதானமாக ஆடினர். மறுமுனையில் நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோ ரூட் நங்கூரம் போல களத்தில் நின்று இந்தியாவிற்கு எதிராக தனது 6வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
அவரை அவுட்டாக்க இந்திய கேப்டன் விராட்கோலி அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தினார். அவற்றின் பயனாக, இந்திய அணிக்கு பெரும் குடைச்சலாக விளங்கிய ஜோ ரூட் கடைசியில் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 172 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 109 ரன்களை சேகரித்து வெளியேறினார்.
இரட்டை இலக்கத்தில் அணியின் ஸ்கோர் இருந்தபோது களமிறங்கிய ஜோ ரூட் அணியின் ஸ்கோர் 274 ஆக இருந்தபோது வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் சாம் கரனும் 32 ரன்னில் வெளியேறினார். கடைசியில் ஸ்டூவர்ட் ப்ராட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இங்கிலாந்து அணி தற்போது வரை 9 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியை விட இங்கிலாந்து அணி தற்போது வரை 201 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இன்னும் சிறிதுநேரத்தில் கடைசி விக்கெட்டையும் வீழ்த்திவிட்டு இலக்கை நோக்கி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.