தமிழில் பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். மேலும், இவர் திருவிளையாடல் ஆரம்பம், விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சண்டிமுனி உள்பட ஏராளமான பல படங்களில் நடித்துள்ளார். மேலும், திருட்டு விசிடி மற்றும் சும்மாவே ஆடுவோம் என்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, நெல்லை சங்கர், சேலம் மணி ஆகியோர் தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக புகார்மனு அளித்திருந்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, ”இன்று கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்று வருகின்றனர். இதனால், குழந்தைகளின் கைகளில் செல்போன்கள் அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், அப்போது மிகவும் ஆபாசமாகவும், கேட்கக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியும், தங்களை பிரபலங்கள் என்று கூறி டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அவற்றை பதிவிட்டும் வருகின்றனர். அதைப் பார்க்கும் மாணவர்கள் அந்த வீடியோக்களில் வருவதைப் போன்று தாங்களும் செய்ய வேண்டும் என்று நிறைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வருகிறது.
அதனால், நான் இவ்வாறு பேசுவது எல்லாம் தவறு. தமிழர்களுக்கென்று ஒரு கலாச்சாரம் உண்டு. தமிழர்களுக்கென்று ஒரு பண்பாடு உண்டு. இதனால், அவ்வாறு பேசுவது எல்லாம் தவறு என்று ஒரு பேட்டியில் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தேன். அதைப் பார்த்த பலரும் எனக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
அதைப்பார்த்த இருவர் என்னை தரக்குறைவாக பேசியும், மிரட்டியும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோ ஆதாரங்களை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார்மனுவாக அளித்துள்ளேன். அவர்கள் செய்யும் தவறுகளை கண்டித்து கருத்து தெரிவித்தால், அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசி கீழ்த்தரமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எனக்கு நேரடியாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தவன் சேலம் மணி. பிறகு நெல்லை சங்கர் என்பவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. நேற்று ஜி.பி.முத்து நேரடியாக என்னை தாக்கி பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். அவரின் பெயரை பயன்படுத்தி நாங்கள் பிரபலமாகிறோம் என்று அவர் பேசியுள்ளார். திரைத்துறையில் 23 ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நடிகர் சுகுமார் உள்பட சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், யூ டியூப், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற சென்சார் எல்லாம் கிடையாது. இதனால், ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து போன்றோர் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களை பார்த்து சிறுவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். அவர்களை அழைத்து விருது கொடுக்கிறார்கள். இதைப்பார்த்த என்னுடைய மகள், நானும் இதுபோன்று ஆபாசமாக பேசினால் எனக்கும் விருது கொடுப்பார்களா? என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது ஏராளமான குறும்படங்களிலும், சன்னிலியோன் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.