காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் தனிநபர் ஆட்டங்களிலும், குழு ஆட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காமன்வெல்த் இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில், ஹாக்கி இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. ஹாக்கியில் இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணியாக வலம் வருகிறது. காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த மூன்று போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாதான் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் அந்த மோசமான வரலாற்றுக்கு இந்திய வீரர்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி அணியைப் பொறுத்தவரையில் மன்ப்ரீத்சிங் தலைமையிலான இந்திய அணி பலமிகுந்த அணியாகவே விளங்குகிறது. ஆனாலும், ஆஸ்திரேலியாவை விட இந்தியா சிறப்பாக ஆடினால்தான் இந்தியா வெற்றி பெற முடியும்.
இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் நடுவரிசையில் கேப்டன் மன்ப்ரீத்சிங்கும், ஹர்திக்சிங்கும், நில்கன்டா ஷர்மாவும் பலமாக உள்ளனர். இந்திய அணியின் மன்தீப்சிங் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஆகாஷ்தீப்சிங் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இன்றும் அந்த அசத்தலான ஆட்டம் தொடர வேண்டியது அவசியம்.
இவர்கள் தவிர இந்திய வீரர்கள் ஷாம்ஷெர்சிங், லலித், குர்ஜந்த் சிங் மற்றும் அபிஷேக் ஆகியோரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை தொடர வேண்டும். இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி 5 மணிக்கு தொடங்க உள்ளது. காமன்வெல்த் வரலாற்றில் இந்திய அணி இதுவரை தங்கம் வென்றதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்