நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்திய- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்த நிலையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடங்கியது.



ஆட்டம் தொடங்கி 11 பந்துகளே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மைதானங்கள் தார்ப்பாயினால் மூடப்பட்டது. இதையடுத்து, மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 54 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும்  1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட், ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து விக்கெட் கீப்பர் பார்ஸ்டோவிடம் வெளியேறினார்.


இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை மீட்டனர். அணியின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தபோது கே.எல்.ராகுல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். 214 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் கே.எல்.ராகுல் 84 ரன்களை குவித்தார்.




ஷர்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா அதிரடி ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். 86 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 ரன்களை குவித்த ஜடேஜா, ராபின்சன் பந்துவீச்சில் ப்ராடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 232 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.  இதையடுத்து, முகமது ஷமி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஆடிய பும்ரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களை எடுத்து கடைசி விக்கெட்டாக ராபின்சன் பந்துவீச்சில் ப்ராடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களை குவித்தது. இந்திய அணி இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் 95 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.