Asian Games 2023 Medal Tally: சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 16 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
இந்தியாவின் பதக்க வேட்டை
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பதக்க வேட்டையையும் நடத்தி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில், பல விளையாட்டு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய இதுவரை இல்லாத அளவிலான புதிய வரலாற்றை எட்ட உள்ளது.
16 தங்கப் பதக்கங்கள்:
வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் ஓஜஸ் பிரவின் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. இதன் மூலம், இந்த எடிஷனில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 16 தங்கங்களை வென்றது தான், இந்தியாவின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சூடு மற்றும் வில்வித்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
வரலாறு படைக்கும் இந்தியா
வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்னும் பல்வேறு பிரிவுகளில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. குறிப்பாக ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா, ஆடவர் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற, ஜோதி சுரேகா மற்றும் ஓஜஸ் பிரவின் ஆகிய இருவரும் நாளை நடைபெற உள்ள தனிநபர் இறுதிப்போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்திலும், இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. இதன் மூலம் முன்பு எப்போது இல்லாத எண்ணிக்கையில், இந்திய அணி நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் அதிக தங்கப்பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட உள்ளது.
தகர்க்கப்பட்ட பழைய சாதனை:
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தற்போது வரை 73 பதக்கங்களை வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவே இந்தியாவின் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில், இந்தியா அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் நடைபெற்ற அந்த தொடரில் இந்தியா 16 தங்கம், 13 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.