சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11வது நாளான இன்று இந்தியா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என  இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரே பதிப்பில் அதிக பதக்கங்களை வென்ற இந்தியா என்ற புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. 


2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தற்போது வரை 71 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தநிலையில், இதுவரை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இதுவே இந்தியாவின் சிறந்த ஆண்டாக அமைந்தது. ஏனெனில், இதற்கு முன்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒரே பதிப்பில் இந்தியா அதிகபட்சமாகவே 70 பதக்கங்களை வென்றிருந்தது. இந்த சாதனையானது கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா படைத்திருந்தது. அப்போது இந்தியா 16 தங்கம், 13 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. 






இந்த சூழலில் இதுவரையே இந்தியா 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 16 தங்கம், 26 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இன்றைய 11வது நாளில், வில்வித்தையின் கலப்பு குழு போட்டியில் ஓஜாஸ் தியோடலே மற்றும் ஜோதி இணை தங்கப் பதக்கம் வென்றனர். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே பதிப்பில் அதிக பதக்கங்களை வென்று இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. 


ராம் பாபு - மஞ்சு இணை வெண்கலம் வென்றதன் மூலம் 2023 ஹாங்சோ ஆசியன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 70வது பதக்கமாக பதிவானது. இது கடந்த 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வென்ற பதக்கத்திற்கு சமனானது.  இதன்பிறகு, ஓஜஸ் தியோடலே மற்றும் ஜோதி வென்னம் வில்வித்தையில் 159 - 158 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா இந்த ஆசிய போட்டியில் 16வது தங்கப்பதக்கத்தையும், ஒட்டுமொத்தமாக 71 பதக்கத்தையும் வென்று புதிய சாதனை படைத்தது. 






2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சதம் அடிக்குமா..? 


2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11வது நாளான இன்று வரை இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இன்னும் ஆசிய விளையாட்டு போட்டி முடிய இன்றை நாளையும் சேர்த்து 5 நாட்கள் உள்ளது. வருகின்ற நாட்களையும் சேர்த்து இந்திய வீரர்கள் பதக்கத்தை அள்ளினால் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு சதப் பதக்கம் வென்று சரித்திரம் படைக்க முடியும். இன்று அதாவது புதன்கிழமை இந்தியா 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.