டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி
ராஜ்கோட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று சொல்வது போல், முதலில் ஆடி ரன்களை குவித்து விடலாம் என நினைத்த அயலாந்து கேப்டன் கேபி லுயிசுக்கு, அதிர்ச்சியே காத்திருந்தது. தன்னுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாரா ஃபோர்ப்ஸ் 9 ரன்களுக்கு டைடஸ் சாதுவின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேற, அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய உணா ரேமண்ட் 5 ரன்களுக்கு, ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆட வந்த ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிரியா மிஸ்ராவின் பந்தில் ஸ்டம்ப்பிங் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து, அடுத்த பந்திலேயே, லாரா டெலானியை கோல்டன் டக் ஆக்கினார் பிரியா மிஸ்ரா. மறுபுறம், ஒற்றை ஆளாக அணிக்கு மெதுவாக ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார் கேப்டன் கேபி. 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், கேப்டனுடன் ஜோடி சேர்ந்த லீ பால், அணியை சரிவிலிருந்து மீட்டு, 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி, 117 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து ஆடிய கேபி 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 50 ஓவர்கள் ஆடிய அயர்லாந்து அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், டைடஸ், சாயாளி, தீப்தி ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதிரடியாக ஆட்டத்துடன் தொடங்கிய இந்திய அணி
தொடர்ந்து, 239 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், பிரதிகாவும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில், 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஸ்மிருதி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 20 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் ஒரு பக்கம் பிரதிகா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த தேஜலும் சரவெடியாக ஆடினார்.
இந்திய மகளிர் அணி எளிதான வெற்றி
ஆட்டம் அதிரடியாக சென்றுகொண்டிருந்த நிலையில், 89 ரன்கள் எடுத்திருந்த பிரதிகா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் தேஜலுடன் இணைந்து, இந்தியாவிற்கு வெற்றியை தேடித் தந்தார். இறுதியில், தேஜல் 46 பந்துகளில் 53 ரன்களுடனும், ரிச்சா 2 பந்துகளில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து தரப்பில் அய்மி மாகுயர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 34.3 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்தது. 89 ரன்கள் குவித்த பிரதிகா ஆட்டநாயகியானார். இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.