கொழும்புவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை வெற்றி இலக்காக 263 ரன்களை நிர்ணயித்துள்ளது.


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், கொழும்புவில்  உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்ணான்டோ மற்றும் மினோத் பனுகா ஆகியோர் களமிறங்கினர். பொறுமையாக ஆடி வந்த இந்த ஜோடியை, அணி 49 ரன்கள் எடுத்திருந்தபோது, சாஹல், அவிஷ்கா பெர்ணான்டோவின் விக்கெட்டை வீழ்த்தினார்.






இதன்பின்னர் வந்து அதிரடியாக ஆடிய பனுகா ராஜபக்சே 24 ரன்களில் குல்தீப் யாதவிடம் சரணடைந்தார். அதன்பின்பு மினோத் பனுகா, தனஞ்செயா டி சில்வா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து தடுமாறிவந்த நிலையில்,  சரித் அசலங்கா, கேப்டன் தசுன் சனகா பொறுமையாக விளையாடி வந்தனர். சரித் அசலங்கா 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாஹல் அவரின் விக்கெட்டை எடுத்தார். பின்னர் வந்த வனிந்து ஹசரங்கா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தசுன் சனகாவும் 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சமிகா கருணரத்னே கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடினார்.






42 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகள் இழந்து 197 ரன்கள் எடுத்து தடுமாறிவந்த நிலையில், கருணரத்னேவின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களை இலங்கை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 43 நாட் அவுட், தசுன் ஷனகா 39, சரித் அசலங்கா 38 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் தீபக் சஹர், சாஹல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.