இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, மூன்றாவது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது. நான்காவது நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால், ஒரு பந்துகூட வீசமுடியாத சூழலில் ஆட்டம் கைவிடப்பட்டது.


ஐந்தாவது நாள் மட்டும் விறுவிறுப்பாக இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி, 32 ரன்கள் முன்னிலை பெற்று களத்தில் உள்ளது. முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்துள்ளது.



ஏமாற்றத்தில் ரசிகர்கள்!


முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு ஐசிசி தடைவிதித்தது. ரசிகர்களே இல்லாமல் போட்டி நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு 4000 பேர் மைதானம் வந்து போட்டியை காணலாம் என ஐசிசி அறிவித்தது. அதாவது, ஏஜியாஸ் பவுல் மைதானத்தின் 25% இருக்கைகளுக்கு டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


இதனால், மிக குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே நேரடியாக ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற டிக்கெட்டுகள் எல்லாம் ஐசிசியின் அதிகாரப்பூர்வ டிக்கெட்டிங் ஏஜெண்டுகள் மூலமாக விற்பனையானது. இந்த டிக்கெட்டிங் ஏஜெண்டுகளால் விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.



பாரத் ஆர்மி ஃபேன் க்ளப்


இந்திய கிரிக்கெட் அணியின் ‘Fan-club’களில் உலக பிரபலமான ’பாரத் ஆர்மி ஃபேன் க்ளப்’, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான டிக்கெட்டிங் ஏஜெண்ட்டாக தேர்வு செய்யப்பட்டது. பாரத் ஆர்மி மூலம் டிக்கெட்டுகளை பெற்று உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்து விரைந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது விராட் கோலி பேட்டிங் செய்ய களமிறங்கியபோது பாரத் ஆர்மி ரசிகர்கள், கேப்டன் கோலிக்கு ஆரவாரமாக உற்சாகம் தந்தனர். ஒவ்வொரு நாளும் போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் ரசிகர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சுகிறது. போட்டி தொடங்க தாமதமாகிறது அல்லது அந்நாளுக்கான போட்டி ரத்து செய்யப்படுகிறது.






இந்நிலையில், நான்காவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டதால் போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு நாட்கள் ஆட்டம் இல்லாமல் முடிவடைந்த நிலையில், ரிசர்வ் நாள் இருந்தும் போட்டி டிராவை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.


மழையால் சொதப்பிய ஆட்டம்!


ஒரு நாள் கிரிக்கெட், டி-20 போட்டிகளைவிட டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஐந்து நாள் ஆட்டம் என்றாலும், போட்டியில் முக்கிய மொமெண்ட்டுகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால், அப்போதும் இப்போதுமாய் மழை குறுக்கிட்டு போட்டியை காணும் சுவாரஸ்யம் குறைந்ததுடன், “மேட்ச் நடக்குதா, இத அப்பப்போ ஞாபகப்படுத்துங்க” என சொல்லும் அளவுக்கு சலிப்படைந்துவிட்டது. இங்கிலாந்து சம்மர் நேரம் என குறிப்பிடப்படும் இந்த காலத்தில், மழை விடாமல் பெய்து வருகிறது. இங்கிலாந்தின் மற்ற பகுதிகளில் கூட மழை பெய்யவில்லையாம், போட்டி நடந்து கொண்டிருக்கும் சவுத்தாம்ப்டன் பகுதியில் மட்டும் மழை பெய்வதெல்லாம் வேற லெவல்! 


டிராவால் யாருக்கு சாதகம்?


இன்றைய ரிசர்வ் நாள் ஆட்டத்தில் 98 ஓவர்கள் வீசப்படும். முதல் ஐந்து நாட்களில் வெறும் 225 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிடாத பட்சத்தில் 98 ஓவர்களும் வீசப்படலாம். இந்நிலையில், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்தால் போட்டி டிரா ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.



ஒரு வேளை போட்டி டிரா அல்லது சமனில் முடிந்தால், இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. முடிவு டிராவானால், கோப்பையை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி வெற்றியாளர் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு வழங்க இருக்கும் பரிசுத்தொகையின் மொத்த பணத்தை இரு அணிகளுக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 1.6 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 12 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த பரிசுத்தொகை இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



”உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டினு ஒன்னு நடக்குதா அப்பப்போ ஞாபகப்படுத்துங்க” என கதறும் அளவிற்கு சொதப்பலான டெஸ்ட் இறுதி போட்டியாக முடிந்துவிடாமல் நான்காது நாள் ஆட்டம் போட்டிக்கு உயிர் கொடுத்துள்ளது. ரிசர்வ் நாளான இன்றைய போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.