கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. ஆனால் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு அங்கே நிலவும் வானிலை ஒத்துழைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏற்கனவே 2019 உலகக்கோப்பையின் போது அரையிறுதியில் மழை பெய்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை மாற்றியது ரசிகர்கள் மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது, இந்நிலையில் முதல் முறையாக நடைபெறும் உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் மழையின் இடையூறு இருக்கக்கூடும் என்கின்ற செய்திகள் ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்த கூடிய நிகழ்வாக அமைந்துள்ளது.


இங்கிலாந்து சவுதாம்ப்டன் மைதானத்தில் வானிலை எப்படி ?


ஜூன் 18ம் தேதி, அதாவது நாளை இந்த போட்டி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 6வது நாளாக ரிசர்வ் டே 23ம் தேதி இருக்கும். இதில் தற்போதைய வானிலை நிலவரப்படி இடியுடன் கூடிய மழை, காலை வேளையில் சாரல் மழை, அவ்வப்போது விட்டு விட்டு பெய்யும் சாரல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. அதாவது போட்டி நடைபெறும் 6 நாட்களுமே மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக காட்டுகிறது. அப்படி விட்டு விட்டு மழை பெய்தால் போட்டி நடக்கும் மைதானத்தை தயார் செய்வது, உலர வைப்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்.



ஜூன் 18 - டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் நாள்  


இருண்ட மேகங்கள் முதல் நாளிலிருந்தே போட்டியை சூழ்ந்திருக்கும், வெப்பநிலை என்பது அதிகபட்சம் 17 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் மணிக்கு 11 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். இடியுடன் கூடிய மழை, சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. முதல் நாள் 67 சதவீதம் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக Accueweather.com கணித்துள்ளது. ஆக முதல் நாள் முழுசா 90 ஓவர் விளையாட்டு நடைபெறுவது ஆச்சரியமே.


ஜூன் 19 - டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2வது நாள்  


முதல் நாளை விட இரண்டாவது நாள் வானிலை சற்று நன்றாக இருக்கும், வெப்பநிலை என்பது அதிகபட்சம் 19 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் மணிக்கு 12 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். காலை வேளையில் லேசாக சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 2வது நாளில் 60 சதவீதம் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக Accueweather.com கணித்துள்ளது. முதல் நாளை விட இன்றைய நாள் ஒரு முழுமையான ஆட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.


ஜூன் 20 - டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3வது நாள்  


முதல் நாளை விட மோசமான வானிலை நிலவும் நாளாக இருக்கும், வெப்பநிலை என்பது அதிகபட்சம் 19 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். பெரும்பாலும் இருண்ட வானிலை நிலவும், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 3வது நாளில் 68 சதவீதம் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக Accueweather.com கணித்துள்ளது. வெளிச்சமின்மை, காற்று வேகமாக வீசுவது, மழையின் குறுக்கீடு ஆகியவற்றிக்கு நடுவே ஆட்டம் எத்தனை ஓவர் நடைபெறும் என்பது சந்தேகமே.


ஜூன் 21 - டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 4வது நாள்  


டெஸ்ட் போட்டியின் அணைத்து நாட்களை விடவும் சிறந்த வானிலை நிலவும் நாளாக இருக்கும், வெப்பநிலை என்பது அதிகபட்சம் 19 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 32 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என்பதே ஒரே ஒரு பின்னடைவு. மேகமூட்டமாக வானிலை நிலவும், இடிக்கு வாய்ப்பில்லை, ஆனால் சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 4வது நாளில் 41 சதவீதம் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக Accueweather.com கணித்துள்ளது. அதனால் பெரும்பாலும் போட்டி தடைபெறாமல் நடைபெற அதிகம் வாய்ப்புள்ள நாள்.


ஜூன் 22 - டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 5வது நாள்  


4வது நாள் அளவு இல்லை என்றாலும், ஓரளவு நல்ல வானிலை நிலவும் நாளாக இருக்கும், வெப்பநிலை என்பது அதிகபட்சம் 18 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 11 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். மேகமூட்டமாக வானிலை நிலவும், பிற்பகலுக்கு மேல் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 5வது நாளில் 56 சதவீதம் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக Accueweather.com கணித்துள்ளது. அதனால் போட்டி ஓரளவிற்கு தடைபெறாமல் நடைபெறும்.


மழை குறுக்கீடு இருக்கும் போதெல்லாம், போட்டி வழக்கமான நேரத்தையே விட கூடுதல் நேரம் நடைபெறும். அப்படி கூடுதல் நேரத்திலும் 5 நாள் ஆட்டத்தை முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லையெனில், போட்டி ரிசர்வ் டே என்னும் 6வது நாள் நடைபெறும். அந்த 6 வது நாள் ஐந்தரை மணி நேரம் அல்லது 83 ஓவர்கள் வீசப்படும்வரை போட்டி நடைபெறும். இதிலும் முடிவு வரவில்லை என்றால் போட்டி ட்ரா என அறிவிக்கப்பட்டு இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொள்வர். 6வது நாள் ஆட்டத்தில் 42 சதவீதம் மழை பொழிவுக்கு வாய்ப்புண்டு.