இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யார்? இறங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
முதல்முறையாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டன் நகரில் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது. தனது சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு சென்றது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தெம்புடன் நியூசிலாந்து அணி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள நியூசிலாந்தை சிலர் குறைத்து மதிப்பிட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளனர் அந்த அணி வீரர்கள். இந்திய அணிக்கும் இது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
WTC 2021 Final: 3 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - யார் உள்ளே, யார் வெளியே ?
வேகப்பந்து வீச்சில் பலம் பொருந்திய அணியாக நியூசிலாந்து உள்ளதால், இந்தியாவுக்கு தொடக்கமே வலுவாக அமைய வேண்டும். அது ஓப்பனிங் பேட்ஸ்மேன்களிடமே உள்ளது. தற்போது அந்த இடத்தில் யார் களமிறக்கப்படுகிறார்கள் என்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரேஸில் ரோகித் சார்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளனர். இதில், ரோகித் கன்பார்ம் என்றாலும், அவருடன் இறங்குவது கில்லா அல்லது அகர்வாலா என்றுதான் தெரியவில்லை. ஒரு வேளை ரோகித்திற்கு காயம் ஏதேனும் ஏற்பட்டால் இந்த இருவரும் களமிறக்கப்படலாம்.
ரோகித் சர்மா
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோகித்தின் கையே ஓங்கி உள்ளது. இந்தத் தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய ரோகித் 11 போட்டிகளில் விளையாடி 1030 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். பேட்டிங் சராசரி 64.37 வைத்துள்ளார். 27 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர்கள் அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 123 பவுண்டரிகள் அடித்துள்ளார். ரோகித்தும், மயங்க் அகர்வாலும் இணைந்து 317 ரன்கள் அடித்துள்ளனர் இந்தத் தொடரில்.
மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, மொத்தம் 78 ரன்கள் எடுத்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, சிட்னியில் நடந்த மூன்றாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. ரோகித்துடன் கில்லையே அணி நிர்வாகம் களமிறக்கியது. அதன்பிறகு, மயங்க் அகர்வால், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடினார். டெஸ்ட் விளையாடி நீண்ட நாட்கள் ஆனது, மட்டுமல்லாமல், இதற்கு முன்பு கடைசியாக விளையாடிய டெஸ்டில் சோபிக்காததால், மயங்க் அகர்வால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவது சந்தேகமே என்று சொல்லப்படுகிறது.
சுப்மன் கில்
இந்திய அணிக்காக இதுவரை 7 டெஸ்டில் விளையாடி இருக்கும் சுப்மன் கில் 378 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன்கள் 91.பேட்டிங் சராசரி 34.36. இவரின், பிளஸ் ஆக பார்க்கப்படுவது, எதற்கும் பயப்படாமல் விளையாடுவது. அது, ஆஸ்திரேலியா தொடரின்போது அனைவருக்கும் தெரிந்தது. உலகின் தலைசிறந்த பவுலர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணிலே மிரள வைத்தவர். அங்கு 3 போட்டிகளில் விளையாடி 259 ரன்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் விளையாடியதைப் போலவே, இங்கிலாந்திலும் நன்றாக கில் பெர்பார்ம் செய்வார் என்று பிசிசிஐ அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இதனால், ரோகித்துடன் கில்லையே களமிறக்கப்படலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !