ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் எஸ்.பியாக பணியாற்றி வருபவர் கார்த்திக். சென்னையைச் சேர்ந்த இவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். கார்த்திக்குடன் ஒரே காரில் பயணம் செய்த 3 போலீசார் உட்பட 5 பேர் விபத்தில் காயமடைந்தனர். ஸ்கூட்டரில் சென்ற பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற எடுத்த முயற்சி விபத்தில் முடிந்துள்ளது.
ராம்கார்க் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 33-இல் இந்த விபத்து நடந்தது. விபத்து குறித்து தெரிவித்துள்ள உயர் அதிகாரி, எஸ்பி கார்த்திக் ராஞ்சியை நோக்கி அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்தி சென்றபோது இணைப்பு சாலையில் இருந்து கவனம் இல்லாமல் ஒரு பெண் ஸ்கூட்டரில் வேகமாக சாலைக்குள் வந்துள்ளார். அந்த ஸ்கூட்டரில் மோதிவிடக்கூடாது என்பதற்காக வண்டியை திருப்பிய போது நிலைதடுமாறி லாரியில் மோதியுள்ளது கார். இதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேரும் காயமடைந்துள்ளனர். அந்த ஸ்கூட்டரில் ஒரு பெண்ணும், குழந்தையும் லேசான காயங்களுடன் தப்பித்தனர் என்றார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரும், மருத்துவக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இணைப்பு சாலையில் இருந்து மெயின் ரோட்டில் அல்லது தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்கள் பொறுமையாகவே சாலையில் இணைய வேண்டும். சாலை காலியாக உள்ளதா என்பதை தெரிந்துகொண்ட பின்னரே பிரதான சாலையில் இணைய வேண்டும். பிரதான சாலையில் வாகனங்கள் அதிவேகமாக வருவதுதான் வழக்கம். திடீரென குறுக்கே வாகனங்கள் புகுந்தால் அதிவேக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த எஸ்பி கார்த்திக் ஜார்க்கண்டில் பல அதிரடிகளை செய்தவர். ராஞ்சியில் போக்குவரத்து விதியை மீறிய இந்திய கிரிக்கெட் வீரராக இருந்த தோனிக்கு அபராதம் விதித்து சட்டம் அனைவருக்கும் ஒன்றே என அதிர வைத்தவர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹர்தகா மாவட்டத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஜய் குமார் என்பவர் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தார். நக்சல் நடமாட்டம் அதிகம் எனக் கூறப்படும் அந்தப்பகுதியில் 2015ல் பதவியேற்றார் சென்னையைச் சேர்ந்த கார்த்திக். அந்த பகுதி இளைஞர்களிடையே வாலிபால் விளையாட்டு போட்டி வைத்தார். துப்பாக்கி, போலீசார், மிரட்டல் என்றே பார்த்துப்பழகிய அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு போட்டி வைத்த கார்த்திகை புதிதாக பார்த்தனர்.
நக்சல் கூட்டத்தின் தலைவனாக இருந்த நகுல் யாதவ் என்பவரின் சொத்துகளை ஜப்தி செய்து, அவரையும் திருத்தினார். கூட்டத்தின் தலைவனே நல்வழிக்கு வந்ததால் பல இளைஞர்களும், சிறுவர்களும் ஆயுதம் ஏந்துவதை நிறுத்தினர். பணிக்காலத்தில் 25 சிறுவர்களை நக்சல் பிடியில் இருந்து மீட்டார். 18 நக்சல்கள் அவரிடம் சரணடைந்தனர். நக்சல் பகுதியில் இருந்த நீர் வீழ்ச்சிகளையும், அழகான பச்சைப் போர்த்திய காடுகளையும் புகைப்படம் எடுத்த கார்த்திக், சுற்றுலா வளர்ச்சி மூலம் பிரபலப்படுத்தினார்.
நக்சல் பகுதியாக இருந்த லோஹர்தகா பின்னாளில் ஒரு சுற்றுலாத்தளமாகவே மாறியது. பயமின்றி பலரும் அங்கு சென்றுவந்தனர். அனைத்துக்கும் பின்னணியில் கார்த்திக்கின் உழைப்பு அதிகமாகவே இருந்தது. இதனைப் பாராட்டி 2019-ஆம் ஆண்டு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ‘சாம்பியன் ஆஃப் சேஞ்’ எனும் விருதை அளித்து கவுரவித்தார். தமிழ்நாட்டில் இருந்து சென்று பல அதிரடிகளை செய்து காட்டிய எஸ்பி கார்த்திக், இன்று விபத்தில் காயமடைந்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!