5வது நாள் ஆட்டம் லேட்டாக தொடங்கினாலும், லேட்டஸ்டாக ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளது இந்திய அணி. 4 நாள் ஆட்டங்கள் நிறைவடைந்திருந்த நிலையில் 101/2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி ஆட்டத்தை துவங்கியது. 3வது நாள் பந்துவீசிய போது செய்த தவறை இந்திய அணி இன்று செய்யவில்லை. நேரடியாக சரியான லெங்த் & லைனில் முழு உத்வேகத்துடன் பந்துவீசினார்கள் இந்திய அணி வீரர்கள். அதனால் இந்தியா வீசிய முதல் ஐந்து ஓவர்களில் 1 ரன் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து அணி.


ராஸ் டைலரை தூக்கிய ஷமி


இன்று இந்திய அணி உணவு இடைவெளி வரை வீசிய 23 ஓவர்களில் வெறும் 34 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்து 3 முக்கியமான விக்கெட்களை இழந்துள்ளது நியூசிலாந்து. முகமது ஷமி வீசிய 63வது ஓவரின் முதல் பந்தில் பொறுமை இழந்த ராஸ் டைலர் டிரைவ் ஆட, அதை சிறப்பாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார் சுப்மன் கில். 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் அனுபவ வீரர் ராஸ் டைலர்.


இஷாந்த் சர்மா வேகத்தில் சரிந்த ஹென்றி நிக்கோலஸ் 


அடுத்ததாக முந்தைய பந்தில் இன் ஸ்விங் வீசிய இஷாந்த், 69 ஓவரின் 3வது பந்தில் அவுட் ஸ்விங் வீச ஹென்றி நிக்கோலஸ் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்தார். உடனடியாக பாய்ந்த ரோஹித் சர்மா அற்புதமான கேட்ச் பிடித்து ஹென்றி நிக்கோலஸை வெளியேற்றினார்.


அன் பிலேயபில் பந்தை வீசிய ஷமி 






தனது இறுதி போட்டியில் விளையாடி வரும் வாட்லிங் 2 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த நிலையில், ஷமி வீசிய துல்லியமான விளையாட முடியாத பந்தில் ஸ்டம்ப்கள் சிதற ஆட்டமிழந்தார். மேலும் வாட்லிங் விக்கெட்டை வீழ்த்திய ஷமி சவுதாம்ப்டன் மைதானத்தில் டவலுடன் வளம் வரும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.






இந்நிலையில் 135/5 என உணவு இடைவெளியில் தடுமாறி கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. இன்றைய நாள் மொத்தம் 91 ஓவர் ஆட்டம் நடைபெறும் என தகவல்கள் வந்துள்ள நிலையில், நாளை ரிசர்வ் டே ஆட்டமும் இருப்பது இந்த போட்டியை மேலும் சுவாரசியம் ஆக்கியுள்ளது.  போட்டியை திருப்புமா இந்தியா என்ற ஆவலுடன் ரசிகர்கள் போட்டியை எதிர்நோக்கியுள்ளனர். இரண்டு நாள் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவேளை அந்த நாட்களில் போட்டி நடந்திருந்தால் முடிவு இன்னும் சாதகமான சூழலை தந்திருக்கலாம். பார்க்கலாம்... இன்னும் நாட்கள் இருக்கிறது!