ரூ.200 கோடி முறைகேடு விவகாரம்: 83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி செய்யும் பணியில் 200 கோடி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் முறைகேடாக பணம் பெற்ற 83 நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.

Continues below advertisement
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் ₹200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
 


காஞ்சிபுரம் : 200 கோடி முறைகேடு விவகாரத்தில் வருவாய்த்துறை சார்பில் 6 குழுக்கள் அமைப்பு..!
ஆனால், முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ₹200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழக நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டு தெரியவந்தது. இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். 
 
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.  காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில், மேலும், 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது. 


பல ஆண்டுகளுக்கு முன்பாக, அனாதீனம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களாக அவை இருந்துள்ளன. இதனால், அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 இதில், வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என ஆராய, 6 வருவாய் துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையில், போலி பட்டா மூலம் யாருக்காவது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு பெற்றது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
இது தொடர்பாக தற்போது 83 நபர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதில் 126 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மேலும் சிலரின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola