விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. உலகின் வலுவான அணியாக திகழும் இரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டித்தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இரு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காமில் வரும் 4-ந் தேதி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்ற இந்திய அணியும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணியிடம் தொடரை இழந்த இங்கிலாந்து அணியும் தங்களது வெற்றிக்கணக்கை மீண்டும் தொடங்க முழு பலத்துடன் மோதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தத் தொடர் குறித்து, இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேம் சுவான் ஆங்கில விளையாட்டு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "கடந்த முறை விராட் கோலி இங்கிலாந்து வந்தபோது ஜிம்மி ஆண்டர்சன் அவரை அவுட்டாக்கி வெளியேற்றினார். விராட் கோலி தனது கடினமான ஆட்டம் மூலம் ஆண்டர்சன் அவுட்டாகாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி, இங்கிலாந்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். நான் உறுதியாக கூறுகிறேன், அவர் மீண்டும் தான் ஆடிய ஆட்டத்தின் வீடியோவை பார்ப்பார். இங்கிலாந்திற்கு எதிராக தான் ஆடிய ஆட்ட நுணுக்கங்கள் குறித்து நினைவுபடுத்திக் கொள்வார். உலகின் எந்த பகுதியிலும் ரன்களை எடுக்கும் வல்லமை கொண்டவர் விராட்கோலி.


5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. நான்கு போட்டிகளுக்கு கண்டிப்பாக முடிவு கிடைக்கும். நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்து ஆடிய விதத்தையும், நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா ஆடிய விதத்தையும் ஒப்பிடும்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரை இரு அணிகளும் சம பலத்திலே உள்ளன.




இதனால், இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து நான் ஆடிய அணி. இங்கிலாந்து எனது நாடு. ஆனால், நாம் சுழற்பந்துவீச்சில் மிகவும் பலவீனமாக உள்ளோம். இங்கிலாந்தில் கோடைகாலம் தொடங்க உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரை டாப் 6 பேட்ஸ்மேன்களில் இரு வீரர்கள் ஜோ ரூட்டிற்கு துணையாக ஆடுவார்கள்.


அஸ்வினை கண்டிப்பாக அனைத்து போட்டிகளிலும் களமிறக்க வேண்டும். இந்த தொடரில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். இங்கிலாந்தில் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொடருக்கு டியூக் பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதால், சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக சுழலும்படி வீசினால் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும்." இவ்வாறு அவர் கூறினார்.


42 வயதான கிரேம் ஸ்வான் 60 டெஸ்ட் போட்டிகளில் 255 விக்கெட்டுகளும், 79 ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்டுகளும், 39 டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.