இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரிஷப் பண்ட் சதத்தால் வலுவான நிலையை எட்டியுள்ளது. 


 கடந்த ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன.  இதில் நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது. 


நேற்று இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதையடுத்து, இந்தியாவின் இன்னிங்சை இளம்வீரர் சுப்மன்கில்லுடன் அனுபவ வீரர் சட்டீஸ்வர் புஜாரா தொடங்கினார். இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய நிலையிலேயே அடுத்தடுத்து அவுட்டாயினர். 




ஸ்கோர் 27 ரன்களை எட்டியபோது சுப்மன்கில் 17 ரன்களிலும், 46 ரன்களை எட்டிய போது புஜாரா 13 ரன்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடர்ந்து களம் கண்ட ஹனுமன் விஹாரி 20 ரன்களிலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 11 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களிலும் அவுட்டானதால் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இப்படி ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டி20 இன்னிங்ஸ் ஆடினார். அவருக்கு ஜடேஜா கம்பெனி கொடுக்க இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. 


52 பந்துகளில் அரைசதம் விளாசிய பண்ட் 89 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்ஸருடன் 100 ரன்களை கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஜடேஜா அரைசதம் கடந்தார்.இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


இன்று நடக்கும் 2 ஆம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா சதமடிப்பாரா? இந்திய அணி 400 ரன்களை எட்டுமா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண