ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி போட்டியை வென்று அசத்தியுள்ளது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி முடிவில் ஆட்ட நாயன் விருது ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.
போட்டி முடிந்து பரிசளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்டன் கோலி, “ஒரு இந்திய அணி கேப்டனாக நான் பார்த்ததிலேயே டாப்-3 சிறந்த பெளலிங் பர்ஃபாமன்ஸ்களின் ஒன்றை இன்று பார்த்தோம்” என நெகிழ்ச்சி அடைந்தார். போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சுவாரஸ்ய மொமெண்ட்ஸ்களின் ஹைலைட்ஸ் இதோ.
நான்காவது டெஸ்டில் ரோஹித்:
முதல் இன்னிங்ஸில் 11 ரன்களுக்கு வெளியேறினார் ரோஹித். அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஓப்பனிங் களமிறங்கிய ரோஹித், 1 சிக்சர், 12 பவுண்டரிகள் என 205 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகபட்சமாக கடந்த 2019-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளைப் பொருத்தவரை, இந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார் ரோஹித். இந்த தொடரில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதம் கடந்த ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் அடித்த அரை சதத்தை சதமாக மாற்றினார். அதுமட்டுமின்றி இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்தார்.
இங்கிலாந்து கேப்டன் ரூட்
”வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது. முதல் இன்னின்ஸிலேயே முன்னிலை பெற்றிருக்க வேண்டும். பரவலாயில்லை, ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்கின்றோம்” என்றார்
இந்திய அணி கேப்டன் கோலி:
“ஒரு இந்திய அணி கேப்டனாக நான் பார்த்ததிலேயே டாப்-3 சிறந்த பெளலிங் பர்ஃபாமன்ஸ்களின் ஒன்றை இன்று பார்த்தோம். வெளியே சத்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஓர் அணியாக எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நாங்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினோம்” என தெரிவித்துள்ளார்.