இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் ஆட்டமான இன்று, போப்பின் விக்கெட்டை வீழ்த்தியது மூலம் பும்ரா தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவும் பும்ராவின் பந்துவீச்சில் டக்-அவுட்டாக, இங்கிலாந்து சேஸிங்கில் திணறி வருகிறது.






இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரரானார் பும்ரா. 24* டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். 25 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து கபில் தேவ் இரண்டாம் இடத்திலும், 28 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து இர்ஃபான் பதான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.


முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது. உணவு இடைவெளிக்கு பின், 6 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்கள் எடுத்து இங்கிலாந்து விளையாடி வருகிறது.






ஓப்பனிங் களமிறங்கிய பர்ன்ஸ், ஹசீப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் கடந்து இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தாகூர் பந்தில் பர்ன்ஸ் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய மாலன் ரன் - அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஜடேஜா பந்துவீச்சில் ஹசீப் வெளியேற, பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து போப் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 100 ரன்கள் எடுத்த பிறகு அடுத்த 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களத்தில் உள்ள நிலையில், டார்கெட்டை எட்ட இங்கிலாந்து அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தீடீர் விக்கெட் மழை பொழிந்த இந்தியாவுக்கு, இன்னும் 4 விக்கெட்டுகள் எடுத்தால் போட்டியைக் கைப்பற்றும்.