இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று, வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 291 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எடுத்தபோது, பர்ன்ஸ் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் அவுட்டானார். அரை சதம் கடதிருந்த அவர் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஹசீப்பும் அரை சதம் கடந்திருக்கிறார். இங்கிலாந்துக்காக மாலன் ஒன் - டவுன் களமிறங்கியுள்ளார். 107 ரன்கள் எட்டியுள்ள இங்கிலாந்து அணிக்கு, வெற்றி பெற 181 ரன்கள் தேவைப்படுகிறது.
ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்சில் இலக்கை துரத்திச்சென்ற அணிகளில் அதிக ரன்களை எடுத்துள்ள அணி என்ற சாதனையை இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்த நிலையில், சுனில் கவாஸ்கரின் அதி அற்புதமான இரட்டை சதத்தினாலும், சேட்டன் சவுகான், திலீப் வெங்கர்சகர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களை குவித்தது. கவாஸ்கரின் 221 ரன்களால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.
ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி நான்காவது இன்னிங்சில் அதிகபட்சமாக 369 ரன்களை எடுத்துள்ளது. 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திற்கு 500 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த போட்டியில் கெவின் பீட்டர்சனின் சதம் மற்றும் இயான் பெல்லின் அரைசதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்த்தது. ஓவல் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற முதல் தர போட்டிகளில் நான்கு முறை மட்டுமே 350 ரன்கள் நான்காவது இன்னிங்சில் எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் என்பது மிகவும் சவாலான இலக்கு ஆகும். அந்த அணியின் கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளது. போட்டியின் கடைசி நாளான இன்று அந்த அணி மேலும் 291 ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்சின் அதிரடியான சதத்தின் உதவியுடன் 362 ரன்களை குவித்திருந்தனர்.
ஆனால், தற்போது அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை. அவரது இடத்தை நிரப்பும் அளவிற்கு ஆல்ரவுண்டரும் அந்த அணியில் தற்போது இல்லை. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீதுக்கு பிறகு பெரியளவில் அந்த அணி கேப்டன் ஜோ ரூட்டையே நம்பியுள்ளது. இளம் வீரர் போப் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடி வருகிறார். மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் அந்த அணிக்கு ஆறுதலாக பேட் செய்து வருகின்றனர். இருப்பினும் சீரான ஆட்டத்தை இந்தியாவைப் போல இங்கிலாந்தும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இதனால், இன்று நடைபெறும் இறுதிநாள் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.