இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியை பொருத்தவரை, கேப்டன் ஜோ ரூட் மட்டுமே பேட்டிங்கை காப்பாற்றி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாட தொடங்கவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அணி வீரர்களில், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பிராட் வெளியேறியுள்ளார். இதனால், இங்கிலாந்து அணியில் நிச்சயம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.
இந்திய அணியை பொருத்தவரை, காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட் மற்றும் பட்லர் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால், அவர் இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வாரா அல்லது அஷ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதை கோலி முடிவு செய்ய வேண்டும்.
மேலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இரு அணிகளுக்கும் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
வானிலை: முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறிக்கிட்டது போல இல்லாமல், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முதல் நாள் மட்டுமின்றி ஐந்து நாட்களும் மழைக்கு பெரிதாக வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஐந்து நாட்களும் மழையின் குறிக்கீடு இல்லாமல் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, கே. எல் ராகுல், புஜாரா, ரஹானே, பண்ட், ஜடேஜா / இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா, சிராஜ்
இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), பர்ன்ஸ், சிப்லி, சாக் க்ராலி, பேர்ஸ்டோ, பட்லர், மொயின் அலி, சாம் குரான், ஓலி ராபின்சன், மார்க் வுட், கிரேக் ஓவர்டன் / சக்கிப் மகமுத்