இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்தாவது நாளான இன்று இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து நாளை தொடங்கியது. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே ரிஷப் பண்ட் 22 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இஷாந்த் சர்மாவும் 16 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த முகமது ஷமி மற்றும் பும்ரா இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின்னர் ஷமி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 56* ரன்களுடனும் பும்ரா 34* ரன்களுடனும் இருந்த போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 




இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்ன்ஸ் மற்றும் சிப்ளி ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். அதன்பின்னர் வந்த ஹமீத் மற்றும் ஜோ ரூட் ஒரளவு தாக்குப்பிடித்தனர். தேநீர் இடைவேளைக்கு செல்லும் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. 


 






அதன்பின்னர் தேநீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு 5 விக்கெட் என திணறியது. மோயின் அலி மற்றும் பட்லர் சற்று நிதானமாக அடினர். மோயின் அலி 13 ரன்கள் எடுத்திருந்த போது முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் சாம் கரன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவர் முதல் இன்னிங்ஸிலும் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்ஸிலும் முதல் பந்தில் ஆட்டமிழந்து கிங் பேர் என்ற வெறுக்க தக்க ரெக்கார்டை படைத்தார். இங்கிலாந்து அணி 90 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 


இறுதியில் இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. அத்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. 


மேலும் படிக்க: