இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி ஏமாற்றம் அளித்தார்.


லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்.  இருவரும் நன்றாக ஆடி வந்த நிலையில், ஜடேஜா 17 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த, ரஹேனா டக் ஆவுட் ஆன நிலையில், அடுத்து பண்ட் களமிறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய வந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்தியா தற்போது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 12, ஷர்துல் தாக்கூர் 0 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.


 






முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்று 290 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.ரவி சாஸ்திரிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.


இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.