Jallikattu 2024: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று முடிந்தது.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் QR கோடுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டது.
ஆன்லைன் டோக்கன் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இன்று போட்டிக்கு முன்பாக இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முனியாண்டி திடலில் உள்ள நிரந்தர வாடிவாசலில் நடைபெற்றது.
முதலிடம் பிடித்த கருப்பாயூரணி கார்த்தி:
இந்த போட்டியில், தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் பங்கேற்றுள்ளது. போட்டியில் ஒவ்வொரு சுற்றுகளுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் பல வண்ண சீருடைகளில் அனுமதிக்கபட்டனர். மொத்த 10 சுற்றுகள் நடைபெற்றது.
10வது சுற்று முடிவில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் அபி சித்தரும், 12 காளைகளை அடக்கி திவாகர் என்பவர் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.
முதல் இடத்தை பிடித்த கருப்பாயூரணி கார்த்தி என்பவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் இடத்தை பிடித்த அபிசித்தருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு பூவந்தி அபிசித்தர் அலங்காநல்லூரில் முதல் பரிசும் பெற்றார். அதேபோல, 2022ஆம் ஆண்டு கருப்பாயூரணி கார்த்தி முதல் பரிசும் பெற்றார்.
மேலும், திருச்சி மேலூர் குணா என்பவரின் காளை கட்டப்பா முதல் பரிசை வென்றுள்ளது. மதுரை காமராஜர்புரம் வெள்ளைக்காளி என்பவரின் காளை சவுந்தர் இரண்டாவது பரிசை வென்றுள்ளது.
80 பேர் காயம்:
இந்த போட்டியில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காவல்துறையினர் , ஆம்புலன்ஸ் ஊழியர் என 80 பேர் காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக 11பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியினை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரத்துடன் உற்சாகமாக பார்வையிட்டனர்.
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து காளைக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில்,டிவி, சைக்கிள், பணம், சேர், உள்ளிட்ட ஏராளமான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் அதிகளவிற்கு பெண்கள் மற்றும் திருநங்கைகளால் வளர்க்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட நிலையில், வெற்றிபெற்று பரிசுகளை தட்டிசென்றது என்பது குறிப்பிடத்தக்கது.